என்னென்ன உபகரணங்களை எடுத்து செல்கிறது சந்திராயன்-3 விண்கலம்?
இஸ்ரோவின் சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதற்கான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில், சந்திராயன்-3 திட்டத்தில் என்னென்ன உபகரணங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம். சந்திராயன்-3 விண்கலமானது ப்ரொபல்ஷன் மாடியூல், லேண்டர் மாடியூல் மற்றும் ரோவர் ஆகிய பயண உபகரணங்களைக் கொண்டிருக்கிறது. இதில் ப்ரொபல்ஷன் மாடியூலானது, விண்கலத்தை நிலவின் மேலே, 100 கிமீ சுற்றுவட்டப் பாதை வரை எடுத்துச் செல்லும். அங்கிருந்து லேண்டரானது, தனியே பிரிந்து நிலவில் தரையிறங்கத் தொடங்கும். அனைத்தும் திட்டமிட்டபடி சரியாக நடைபெறும் பட்சத்தில், நிலவின் தென்துருவப் பகுதியில் மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்திய முதல் திட்டமாக சந்திராயன்-3 பெயர் பெரும். அதனைத் தொடர்ந்து லேண்டரிலும், ரோவரிலும் உள்ள அறிவியல் உபகரணங்களைக் கொண்டு விஞ்ஞானிகள் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.
என்னென்ன அறிவியல் உபகரணங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன?
லேண்டரில், நிலவின் நிலஅதிர்வை அளவிடும் கருவியுடன் சேர்த்து மொத்தம் நான்கு அறிவியல் உபகரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதில், நிலவின் மேற்பரப்பின் வெப்பத்தை அளவிடும் Chandra's Surface Thermophysical Experiment கருவி, நிலவின் இயக்கத்தை அறிந்து கொள்ளும் வகையிலான நாசாவின் LASER Retroreflector Array மற்றும் நிலவின் மேற்பரப்பில் ப்ளாஸ்மாவின் அடர்த்தியை அளவிடும் Langmuir Probe, ஆகிய கருவிகள் இடம்பெற்றிருக்கின்றன. லேண்டருடன் அனுப்பப்படும் ரோவரில், Alpha Particle X-ray Spectrometer மற்றும் LASER Induced Breakdown Spectroscope ஆகிய கருவிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை நிலவின் மேற்பரப்பில் இருக்கும் கற்கள், பாறைகள் மற்றும் மண்துகள்களை ஆராய்ந்து, அவை என்ன விதமான இரசாயனத் துகள்கள் மற்றும் கலவைகளால் ஆகியிருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.