அலுவலக வாடகை செலுத்தாததால், ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு
ட்விட்டரின் நிதி நிலை மிகவும் மோசமாக இருப்பதாக, அந்நிறுவனத்தின் CEO, எலன் மஸ்க் பலமுறை குறிப்பிட்டு இருந்தார். மஸ்க் பதவியேற்றதில் இருந்து, அலுவலக இடங்களை மூடுவது, ஆட்குறைப்பு போன்ற பல வழிகளில், செலவைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் நிதி நிலைமை முன்னேறவில்லை போலும். அதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் அமெரிக்காவில், ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின், சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்திற்கான வாடகையை செலுத்தாததற்காக, அந்த வளாகத்தின் உரிமையாளர் வழக்குத் தொடர்ந்துள்ளார். கொலம்பியா சொத்து அறக்கட்டளை சார்பாக, சான் பிரான்சிஸ்கோ சுப்பீரியர் கன்ட்ரி கோர்ட்டில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாடகை செலுத்தக் கூட பணம் இல்லையா?
வழக்கின்படி, 650 கலிபோர்னியா தெருவில் உள்ள, ஹார்ட்ஃபோர்ட் கட்டிடத்தின் 30 வது மாடியில், ட்விட்டர் அதன் அலுவலக வாடகையை செலுத்தத் தவறிவிட்டது. ட்விட்டர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி, அமெரிக்கா டாலர் மதிப்பில், 136,250 ஆகும். ஏற்கனவே, டிசம்பர் மாதத்தில், வாடகை பணம் செலுத்த ஐந்து நாட்கள் கெடு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அந்த ஒப்பந்தத்தை, ட்விட்டர் மீறிவிட்டதாக அந்த வழக்கில், கலிஃபோர்னியா பிராப்பர்ட்டி டிரஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது. இதே போல பல வழக்குகளை, சமீப காலமாக ட்விட்டர் எதிர்கொண்டு வருகிறது. கடந்த மாதம், பிரைவேட் ஜெட் சர்வீசஸ் குரூப், எல்எல்சி, ட்விட்டர் நிர்வாகி ஒருவர் பயன்படுத்திய இரண்டு விமானங்களுக்கு செலுத்த வேண்டிய $197,725, செலுத்தாததற்காக, ட்விட்டர் மீது வழக்கு தொடர்ந்தது.