LOADING...
விண்ணைத் தொடத் தயாராகும் ககன்யான்! மகேந்திரகிரியில் 22 டன் உந்துவிசை கொண்ட என்ஜின் சோதனை வெற்றி
இந்தியாவின் சக்திவாய்ந்த CE20 என்ஜின் சோதனை வெற்றி

விண்ணைத் தொடத் தயாராகும் ககன்யான்! மகேந்திரகிரியில் 22 டன் உந்துவிசை கொண்ட என்ஜின் சோதனை வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
07:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா தனது விண்வெளிப் பயணத்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவின் மிக கனமான ராக்கெட்டான LVM3இன் இதயம் என்று அழைக்கப்படும் CE20 கிரையோஜெனிக் என்ஜினை, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் (IPRC) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த சோதனையின் போது, என்ஜின் 22 டன் உந்துவிசை அளவை எட்டியது. இது புவிஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு கனமான ராக்கெட்டை மேலே தள்ளத் தேவையான மிகப்பெரிய ஆற்றலாகும். சுமார் 165 வினாடிகள் நீடித்த இந்த சோதனையின் போது, என்ஜினின் அனைத்துக் கூறுகளும் எதிர்பார்த்தபடியே மிகத் துல்லியமாகச் செயல்பட்டன.

முக்கியத்துவம்

கிரையோஜெனிக் என்ஜின் ஏன் முக்கியமானது?

கிரையோஜெனிக் என்ஜின்கள் ராக்கெட்டின் மிகக் கடினமான பாகமாகக் கருதப்படுகின்றன. இவை மைனஸ் 200 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் உள்ள திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜனை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன. இவற்றை கையாளுவது கடினம் என்றாலும், கனமான செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தத் தேவையான அபரிமிதமான ஆற்றலை இவை வழங்குகின்றன.

ககன்யான்

ககன்யான் திட்டத்திற்குப் பலம்

இந்தச் சோதனையின் வெற்றி, இந்தியாவின் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு மிகப்பெரிய உந்துதலை அளித்துள்ளது. விண்வெளி வீரர்களை ஏந்திச் செல்லும் ராக்கெட்டின் என்ஜின் எந்தச் சூழலிலும் தோல்வியடையாது என்பதை இந்தச் சோதனை உறுதிப்படுத்தியுள்ளது. 2026இல் ஆளில்லா விண்வெளிப் பயணம் மற்றும் 2027இல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு இந்த என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவுக்குக் கொண்டு சென்ற LVM3 ராக்கெட், தற்போது இந்த மேம்படுத்தப்பட்ட என்ஜின் மூலம் இன்னும் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களையும், மனிதர்களையும் சுமந்து செல்லும் வலிமையைப் பெற்றுள்ளது.

Advertisement