ஆதித்யா L1 மற்றும் சந்திரயான் 3யின் அடுத்த கட்ட செயல்பாடுகளை செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ
சந்திரயான் 3 திட்டத்தைக் கடந்து, கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று ஆதித்யா L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு, பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் நிலைநிறுத்தப்படவிருக்கிறது ஆதித்யா L1. அதற்கு முன்னதாக பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து வெளியேறும் உந்துவிசையைப் பெறுவதற்காக பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது ஆதித்யா L1. இந்நிலையில், பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் ஆதித்யா L1ன் இரண்டாவது சுற்று வட்டப்பாதைய உயர்த்தல் நடவடிக்கையை இன்று அதிகாலை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ. சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கைக்குப் பின்பு, தற்போது 282 கிமீ x 40,225 கிமீ தொலைவில் பூமியை வலம் வரத்தொடங்கியிருக்கிறது ஆதித்யா L1.
சந்திரயான் 3: துயில் நிலைக்குச் செல்லும் விக்ரம் லேண்டர்
கடந்த ஆகஸ்ட்-23ம் தேதியின்று நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய சந்திரயான் 3 திட்டமானது, அதன் திட்டமிடப்பட்ட 14 நாட்களின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பிரஞ்யான் ரோவர் தன்னுடைய செயல்பாடுகளை முடித்து விட்டு, நிலவில் அடுத்த சூரிய உதயத்தின் போது சூரியஒளியைப் பெறும் வகையிலான நிலையில் நிலைநிறுத்தப்பட்டு துயில் நிலைக்குச் சென்றிருக்கிறது. தற்போது பிரஞ்யானைத் தொடர்ந்து, லேண்டரும் துயில் நிலைக்குச் செல்லவிருப்பதாக பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ. லேண்டரின் அறிவியல் உபகரணங்கள் அணைக்கப்பட்டு, சூரியஒளியைப் வகையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. நிலவின் கடும்குளிர் இரவைக் கடந்து, அடுத்த சூரிய உதய நாளான செப்டம்பர் 22ம் தேதியன்று லேண்டர் மற்றும் ரோவர் செயல்பட்டால் மேற்கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இஸ்ரோ பரிசீலனை செய்யும்.