இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்!
நேவிக் (NavIC) திட்டத்தின் கீழ் இரண்டாம் தலைமுறையின் முதல் செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ. GPS போல இந்தியாவிற்கென உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பமே நேவிக் என அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2013-ல் இருந்து 9 செயற்கை கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்திய நிறுவனங்கள் மற்றும் ராணுவத்திற்கான GPS-க்கு மாற்றான சேவையாக இந்த நேவிக் சேவை பயன்படுத்தப்படுகிறது. 2018 வரை IRNSS எனப் பெயரிடப்பட்ட முதல் தலைமுறை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை விட மேம்படுத்தப்பட்ட NVS-01 என்ற இரண்டாம் தலைமுறை செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் NVS சீரிஸல் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தவிருக்கிறது இஸ்ரோ.
எப்போது விண்ணில் செலுத்தப்படுகிறது?
2,232 கிலோ எடையுடன் GSLV-F12 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (29.05.23) காலை 10.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இந்த புதிய செயற்கைகோள். விண்ணில் செலுத்தப்பட்டதிலிருந்து சரியாக 18 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து செயற்கைகோள் தனித்துப் பிரியும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ. அதன் பின்பு அந்த செயற்கைகோளானது அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். GSLV ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவிருக்கும் 9-வது செயற்கைகோள் இந்த NVS-01. 51.7 மீட்டர் உயரமும், 420 டண்கள் எடையும் கொண்டிருக்கிறது GSLV-F12 ராக்கெட். புதிய செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை யூடியூப் தளத்தில் இஸ்ரோவின் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.