இன்று நள்ளிரவு ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது; இந்தியாவின் ஜிபிஎஸ் NavIC சேவை மீண்டும் உயிர் பெறுமா?
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), நாட்டின் சொந்த செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பான NavIC-கை மீண்டும் முழுமையாக செயல்பட வைக்கும் நோக்கில், NVS-03 என்ற புதிய செயற்கைக்கோளை GSLV-F18 ராக்கெட் மூலம் இன்று நள்ளிரவு 11.51 மணிக்கு ஏவுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இச்செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அமெரிக்காவின் ஜிபிஎஸ் சேவைக்கு மாற்றாக இந்தியா உருவாக்கிய 'நேவிக்' அமைப்பில், இருப்பிடத்தை துல்லியமாக கணக்கிட குறைந்தபட்சம் 4 செயற்கைக்கோள்கள் தேவைப்படும்.
முடக்கம்
நேவிக் அமைப்பில் ஏற்பட்ட முடக்கம்
கடந்த மார்ச் மாதம் முதல் NavIC அமைப்பின் செயற்கைக்கோள்களில் இருந்த அணு கடிகாரங்கள் பழுதானதாலும், கடந்த ஜனவரியில் ஏவப்பட்ட NVS-02 செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட வட்டப்பாதையை அடையாததாலும், தற்போது 3 செயற்கைக்கோள்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இதன் காரணமாக நேவிக் அமைப்பால் துல்லியமான இருப்பிடத்தைக் காட்ட முடியாமல், நேரத்தை மட்டுமே வழங்க முடிகிறது.
சிறப்பம்சங்கள்
NVS-03 செயற்கைக்கோளின் சிறப்பம்சங்கள்
தற்போது ஏவப்படவுள்ள NVS-03 செயற்கைக்கோள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு கடிகாரத்தைக் கொண்டுள்ளது.
இதில் சேர்க்கப்பட்டுள்ள L-1 சிவிலியன் சிக்னல் மூலம், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் மொபைல் போன் போன்ற சாதாரண சாதனங்களிலும் நேவிக் சேவையை பயன்படுத்த முடியும்.
NVS-03 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டால், நேவிக் அமைப்பு மீண்டும் தனித்து நின்று இருப்பிடச் சேவைகளை வழங்கத் தொடங்கும்.
தற்போது நேவிக் அமைப்பு இந்திய எல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 1,500 கி.மீ தொலைவிற்கு மட்டுமே சேவையளிக்கிறது.
வரும் நாட்களில் NVS-04 மற்றும் NVS-05 ஆகிய செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலமும், நடுத்தர புவி வட்டப்பாதையில் (MEO) செயற்கைக்கோள்களை நிறுவுவதன் மூலமும் நேவிக் சேவையை உலகளாவிய அமைப்பாக மாற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.