ஆதித்யா-எல்1 விண்ணில் பாய்ந்த அன்று, இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்று நோய் இருப்பது உறுதி
ஆதித்யா-எல்1 ஏவப்பட்ட நாளில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2, 2023 அன்று, இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆய்வகமான ஆதித்யா எல்1, சூரியனை ஆய்வு செய்வதற்கான பயணத்தைத் தொடங்கியபோது, சோம்நாத், தனக்கு வயிற்று பகுதியில் இந்த நோயின் பாதிப்பு இருப்பதை கண்டறிந்துள்ளார். இது குறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத், டார்மாக் மீடியா ஹவுஸுக்கு அளித்த பேட்டியில், ஸ்கேன் ஒன்றில் இது தெரியவந்ததாக தெரிவித்துள்ளார். அவரது பேட்டியில்,"சந்திரயான்-3 மிஷன் ஏவுதலின் போதே சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு அது தெளிவாகத் தெரியவில்லை. அதைப் பற்றிய தெளிவான புரிதல் எனக்கு இல்லை" என்று கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட சோம்நாத்
தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறிப்பட்டதும், அவருக்கு பக்கபலமாக அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்கேன் மூலம் புற்று நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டதுமே, அவர் மேற்கொண்டு உறுதி செய்ய, சென்னைக்கு விரைந்துள்ளார். புற்றுநோய் பாதிப்பு அவரது பரம்பரை நோய் என அப்போது தெரிய வந்ததாகவும் சோம்நாத் தெரிவித்துள்ளார். அதற்கான வைத்திய முறைகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டுள்ளதாகவும், ஒரு அறுவை சிகிச்சையும், அதனை தொடர்ந்து கீமோதெரபி செய்யப்பட்டதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மருத்துவமனையில் நான்கு நாட்கள் கழித்த அவர், ஐந்தாவது நாளிலிருந்து வலியின்றி இஸ்ரோவில் தனது பணியைத் தொடர்ந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார். "இப்போது நான் பூரணமாக குணமடைந்து, மீண்டும் பணியைத் தொடங்கிவிட்டேன்" என்று சோம்நாத் கூறினார்.