"எத்தனை குளறுபடிகள் ஏற்பட்டாலும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கும்"- இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மற்றொரு முக்கியமான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது இஸ்ரோ. 2019-ல் தோல்வியடைந்த சந்திரயான்-2 திட்டத்திற்கு மாற்றாக செயல்படுத்தப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் முனைப்பில் இருக்கிறது இந்திய விண்வெளி அமைப்பு. இந்நிலையில், 'திஷா பாரத்' என்ற லாபநோக்கற்ற நிறுவனம் நடத்திய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு சந்திரயான்-3 திட்டம் குறித்து பேசியிருக்கிறார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத். இந்தத் திட்டம் குறித்து பேசும் போது, "சந்திரயான்-3யில் எந்த விதமான குளறுபடிகள் ஏற்பட்டாலும், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சென்சார்கள் செயலிழப்பு, இன்ஜின்கள் சரியாக வேலை செய்யவில்லை என எந்த விதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அனைத்தையும் கடந்து இந்த முறை லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 திட்டம்:
கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3யை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. ஒரு மாதம் பல்வேறு கட்ட பயணத்திற்குப் பிறகு வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறக்கப்படவிருக்கிறது விக்ரம் லேண்டர். தற்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான்-3யின் முதல் சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கை சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக, மூன்று சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-3யின் சுற்றுவட்டப் பாதையானது 100 கிமீ ஆக குறைக்கப்படவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நிலவில், மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்திய நாடுகளில் நான்காவது நாடாக இந்தியா இணையும்.