2028இல் சந்திரயான் 4, அடுத்த 3 ஆண்டுகளில் விண்கல உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க இஸ்ரோ திட்டம்
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன், இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்த தகவலின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் விண்கலங்களின் வருடாந்திர உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வர்த்தகத் தொடர்புச் செயற்கைக்கோள், பல பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி உட்பட ஏழுக்கும் மேற்பட்ட விண்வெளி ஏவுகணைகளுக்கு இஸ்ரோ தயாராகி வருவதாகத் தெரிவித்தார். இந்தியத் தொழில்துறை முற்றிலும் தயாரிக்கும் முதல் பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதலும் இதில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
சந்திரயான் 4
சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
சந்திரயான் 4 திட்டம் (Lunar Sample-Return Mission) குறித்த அரசு ஒப்புதலை இஸ்ரோ தலைவர் உறுதிப்படுத்தினார். இது இந்தியாவின் மிக சிக்கலான நிலவுப் பயணமாக இருக்கும். சந்திரயான் 4 திட்டத்தை 2028 ஆம் ஆண்டில் இலக்கு வைத்துள்ளோம் என்று அவர் கூறினார். மேலும், சந்திரனின் தென் துருவத்தில் உள்ள நீரை ஆய்வு செய்யும் ஜப்பானின் JAXA உடன் இணைந்து மேற்கொள்ளப்படும் LUPEX திட்டமும் முக்கியமான ஒன்றாகும்.
விண்வெளி நிலையம்
இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்
இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்திற்கான (Indian Space Station) பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும், இது 2035 ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நாராயணன் அறிவித்தார். இதன் ஐந்து தொகுதிகளில் முதலாவது 2028 ஆம் ஆண்டுக்குள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான், திட்டமிட்டபடி 2027ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, 2040 ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்பிற்கு அனுப்பி, பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டு வரும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.