ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையில் திருத்தம் செய்தது இஸ்ரோ
இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்1 விண்கலத்தில் பாதை திருத்தும் பணியை (டிசிஎம்) வெற்றிகரமாக செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) தெரிவித்துள்ளது. விண்கலம் சரியாக இயங்கி வருவதாகவும் இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விண்கலம் ஆரோக்கியமாக உள்ளது மற்றும் சூரியன்-பூமி இடையில் உள்ள L1 புள்ளிக்கு செல்லும் வழியில் உள்ளது. செப்டம்பர் 19, 2023 அன்று நிகழ்த்தப்பட்ட ஆய்வின் பிறகு ஒரு டிராஜெக்டரி கரெக்ஷன் மேனியூவ்ர் (டிசிஎம்) ஏற்பாடு செய்யப்பட்டது. அது அக்டோபர் 6, 2023 அன்று சுமார் 16 வினாடிகளுக்கு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது." என்று தெரிவித்துள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலம்
ஆதித்யா-எல்1 என்பது பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ள முதல் சூரியனுக்கு மிக நெருக்கமான லாக்ராஞ்சியன் புள்ளியில் இருந்து சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்வெளி அடிப்படையிலான ஆய்வகம் ஆகும். இந்த விண்கலம், பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தூரம் 125 நாட்களில் பயணித்த பிறகு, சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் லாக்ராஞ்சியன் புள்ளியான L1 ஐ அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து சூரியனை சுற்றி வந்து ஆய்வு செய்வதோடு, அறிவியல் சோதனைகளுக்கு சூரியனின் படங்களையும் இஸ்ரோவுக்கு அனுப்பும். சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு, இஸ்ரோவின் முக்கிய திட்டமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.