பாரதிய அந்தரிக்ஷ் விண்வெளி மையம்: சப்-சிஸ்டம்களை வடிவமைக்கத் தொடங்கியது இஸ்ரோ
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முதல் சொந்த விண்வெளி மையமான பாரதிய அந்தரிக்ஷ் விண்வெளி மையத்தின் மிக முக்கிய சப்-சிஸ்டம்களை வடிவமைக்கும் பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. 2035 ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் ஐந்து மாடியூல்களைக் கொண்ட விண்வெளி மையத்தை அமைக்கும் இந்தியாவின் லட்சியத் திட்டத்தில் இது மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
வடிவமைப்பு
முதல் மாடியூல் 'BAS-01' வடிவமைப்பு நிறைவு
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், "விண்வெளி மையத்தின் முதல் கட்ட மாடியூலான 'BAS-01'-க்கான அடிப்படை வடிவமைப்பு ஆய்வுகள் மற்றும் சிஸ்டம் இன்ஜினியரிங் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
மொத்தம் 31 அடிப்படை வடிவமைப்பு ஆவணங்கள் வெளியிடப்பட்டு, நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பின் சப்-சிஸ்டம் வடிவமைப்புப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
2028
2028க்குள் விண்வெளியில் முதல் மாடியூல்
மொத்தம் 5 மாடியூல்களைக் கொண்டு உருவாகும் இந்த விண்வெளி மையத்தின் முதல் மாடியூல் 2028 ஆம் ஆண்டிற்குள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட பகுதியாக அக்டோபர் 2024இல் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ககன்யான் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டு வரும் அதிநவீனத் தொழில்நுட்பங்களே இந்த விண்வெளி மையத்திற்கு அடித்தளமாக விளங்கும் என அரசு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பங்கள்
ரீஃபுயலிங் மற்றும் டாக்கிங் தொழில்நுட்பங்கள் தயார்
விண்வெளியில் விண்கலன்களை இணைக்கும் 'டாக்கிங்' (Docking) தொழில்நுட்பத்திற்கான எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் அமைப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மேலும், விண்வெளியிலேயே விண்கலன்களுக்கு எரிபொருள் நிரப்பும் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை ஏற்றிச் செல்லும் HLVM3 ராக்கெட், விண்கலப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க் பணிகளும் வேகமெடுத்துள்ளன.
உள்நாட்டு தயாரிப்பு
உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் விண்வெளி உபகரணங்கள்
தற்போது ககன்யான் திட்டத்திற்காக விண்வெளி ஆடை, விண்வெளி வீரர்களுக்கான இருக்கை, விண்கலப் பார்வைக் கண்ணாடி மற்றும் டாக்கிங் அமைப்புகள் ஆகியவை வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இத்தகைய முக்கியக் கருவிகள் அனைத்தையும் உள்நாட்டிலேயே உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான மாதிரி உபகரணங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன.