சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களையா இந்தியாவில் விற்பனை செய்கிறது ஆப்பிள்?
2015ம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்கியது ஆப்பிள். ஆப்பிள் என்றால் ஆப்பிள் இல்லை, ஆப்பிளின் ஐபோன் அசெம்பிள் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கும் ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட சில நிறுவனங்கள். 2015 முதல் ஐபோன் 6S மாடலில் இருந்தே இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்கியது ஆப்பிள். ஆனால், புதிய மாடல்கள் வெளியாகி சில மாதங்களுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடல்களையே இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்யும். அதன் பின்பே, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட ஐபோன் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஆனால், இம்முறை ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை தொடக்கத்திலிருந்தே இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட மாடல்களையே இந்தியாவில் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்திருந்தது ஆப்பிள்.
சீனாவா? இந்தியாவா?
புதிய ஐபோன் 15 சீரிஸில் டைப்-சி சார்ஜிங் போர்ட்டைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்த போர்ட் பகுதியினுள் பார்த்தால், எந்த நாட்டில் உருவாக்கப்பட்ட ஐபோன் என அதில் பொறிக்கப்பட்டிருக்கும். சில பயனாளர்களுக்கு அதில் சீனா என பொறிக்கப்பட்டிருந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் அசெம்பிள் செய்த ஐபோன்களைத் தானே இந்தியாவில் விற்பனை செய்யவிருப்பதாக கூறியது ஆப்பிள்? ஆம், ஐபோன் 15 மற்றும் 15 ப்ளஸ் மாடல்களை மட்டுமே இந்தியாவில் அசெம்பிள் செய்கிறது ஆப்பிள். 15 சீரிஸின் ப்ரோ மாடல்களானது தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, 15 சீரிஸின் ப்ரோ அல்லாத மாடல்களில் இந்தியா என்றும் 15 சீரிஸின் ப்ரோ மாடல்களில் சீனா என பொறிக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்க்க முடியும்.