
ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் சாட்ஜிபிடி!
செய்தி முன்னோட்டம்
சாட்ஜிபிடி, ஆன்லைன் கல்வி சார்ந்த வணிக நிறுவனங்களுக்கு பெரும் சவாலை முன்வைத்திருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் கல்வி சேவை வழங்கும் நிறுவனம் செக் (Chegg.Inc). கல்லூரி மாணவர்களின் வீட்டுப்பாடங்கள் மற்றும் தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலான சேவையை ஆன்லைன் மூலம் மாதசந்தா கட்டண முறையில் வழங்கி வருகிறது அந்நிறுவனம்.
கொரோனா காலத்தில் அந்நிறுவனத்தின் வருவாய் 57% வளர்ச்சியடைந்த நிலையில், சாட்ஜிபிடியின் வருகைக்குப் பின் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருப்பாகத் தெரிவித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் அந்நிறுவனப் பங்குகள் 38% சரிவைச் சந்தித்திருக்கின்றன.
கடந்த ஆண்டு அந்நிறுவனத்தின் வருவாய் 767 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்நிறுவனத்தால் சாட்ஜிபிடியை எதிர்த்து புதிய AI வசதியை அறிமுகப்படுத்த முடியாது.
எனவே, சாட்ஜிபிடியுடன் சேர்ந்து பயணிக்க திட்டமிட்டிருக்கிறது செக்.
சாட்ஜிபிடி
புதிய சவால்:
செக்கிற்கு மட்டுமல்ல, பல்வேறு ஆன்லைன் கல்வி வழங்கும் நிறுவனங்களும் இதே சிக்கலை தற்போது சந்தித்து வருகின்றன.
சாட்ஜிபிடி போன்ற AI சாட்பாட்களின் பெரும்பலமே, அதன் தகவல்தளம். அந்தக் கருவிகளுக்கு அளிக்கப்படும் தகவல்தளத்தில் இருந்த பயனர்களின் கேள்விக்கான பதிலை அளிக்கின்றன அந்த சாட்பாட்கள்.
எனவே, தங்களுடைய தகவல்தளத்துடன் சாட்ஜிபிடியை இணைத்து, அதன் மூலமே தங்களுடைய சேவையை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன ஆன்லைன் கல்வி வழங்கும் வணிக நிறுவனங்கள்.
செக் நிறுவனம் ஓபன்ஏஐ-யின் சமீபத்திய வெளியீடான GPT-4-ஐ தங்களுடைய செக்மேட் ட்யூட்டர் இன்டர்பேஃஸுடன் இணைத்து, அதனைக் கொண்டு மாணவர்களுக்கான தங்கள் சேவையை வழங்கவிருக்கிறது.
நடப்பாண்டில் ஆன்லைன் கல்வி வணிகத்தின் மதிப்பு 167 பில்லியன் டாலர்களாகவும், இதுவே 2027-ல் 239 பில்லியன் டாலர்களாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.