'ப்ளூஸ்கை' என்றால் என்ன.. ட்விட்டருக்கு மாற்றா ப்ளூஸ்கை?
ட்விட்டரைப் போலவேயான மற்றொரு சமூக வலைத்தளமே ப்ளூஸ்கை. ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டார்ஸேவே இதன் உருவாக்கத்திலும் பங்கெடுத்து வருகிறார். ட்விட்டர் பயனர்களிடையே தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது ப்ளூஸ்கை. ட்விட்டரைப் போலவே டெக்ஸ்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த சமூக வலைத்தளமானது குறிப்பிட்ட பயனர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போதும் இன்வைட்-ஒன்லி அடிப்படையிலேயே இயங்கி வருகிறது இந்த வலைத்தளம். எனினும், தற்போதே இந்த சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்காக ஒரு லட்சம் பயனர்கள் பதிவு செய்து வைத்துக் காத்திருக்கிறார்கள். தற்போது இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக இடம்பெற்றிருக்கிறார் ஜாக் டார்ஸே.
எப்படி இயங்குகிறது ப்ளூஸ்கை?
ட்விட்டருக்கும் ப்ளூஸ்கைக்கும் இருக்கும் பெரிய வித்தியாசமே அதன் கட்டமைப்பு தான். ப்ளூஸ்கையானது பரவலாக்கப்பட்ட கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால், ஒரு தனிப்பட்ட நிறுவனத்தால் இந்தத் தளத்தில் செயல்பாடுகளின் மேல் தாக்கம் செலுத்த முடியாது. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சமூகக் கட்டமைப்பை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும். தங்களுடைய முகப்புப் பக்கத்தில் என்ன விதமான பதிவுகள் இடம்பெற வேண்டும், தங்களுடைய தகவல்களை அந்தத் தளத்தில் வைத்திருக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த முடிவுகள் யாவும் பயனர்களின் விருப்பமே. இதன் தகவல்கள் யாவும் எந்தவொரு நிறுவத்திற்கும் சாராத தனிப்பட்ட சர்வர்களில் சேமிக்கப்படும். எனவே, அந்தத் தகவல்கள் நிறுவனங்கள் எதுவும் பயன்படுத்த முடியாது. விரைவில் இந்த சமூக வலைத்தளம் பொதுப்பயனர்களுக்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.