இரண்டு முக்கிய வசதிகளுடன் வெளியாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன்களுக்கான IOS 17.3 அப்டேட்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐபோன்களுக்கான புதிய இயங்குதளமான ஐஓஎஸ் 17-ஐ வெளியிட்டது ஆப்பிள். அந்த இயங்குதளத்திற்கு, கடந்த மூன்று மாதங்களில் இரண்டு அப்டேட்களை அந்நிறுவனம் வழங்கியிருக்கும் நிலையில், மூன்றாவது அப்டேட்டின் பீட்டா சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
பீட்டா சோதனைக்குப் பிறகு, அடுத்த மாதம் புதிய ஐஓஎஸ் 17.3 அப்டேட்டை அனைத்து ஆப்பிள் பயனாளர்களுக்கும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஓஎஸ் 17 இயங்குதளத்தின் இரண்டாவது அப்டேட்டான ஐஓஎஸ் 17.2-விலேயே தான் வழங்கத் திட்டமிட்டிருந்த பெரும்பாலான வசதிகளை ஆப்பிள் அறிமுகப்படுத்திவிட்டது.
எனினும், அதில் கொடுக்கப்படாத இரண்டு புதிய வசதிகளை, பாதுகாப்பு அப்டேட்களுடன் சேர்த்து இந்தப் புதிய ஐஓஎஸ் 17.3 அப்டேட்டில் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள்.
ஆப்பிள்
ஐஓஎஸ் 17.3 அப்டேட்டில் வழங்கப்படவிருக்கும் இரண்டு வசதிகள்:
முதலாவதாக, திருடப்படும் ஐபோன்களில் உள்ள தகவல்களைத் திருடி அதன் மூலம் பயனாளர்களிடமிருந்து பணம் திருடுவதைத் தடுக்கும் வகையில் Stolen Device Protection என்ற வசதியைப் புதிய அப்டேட்டில் வழங்கவிருக்கிறது ஆப்பிள்.
இதன் மூலம், ஒரு ஐபோன் திருடப்பட்டாலும், அதில் முக்கியமாக தகவல்கள் அடங்கிய பகுதிகளை பயோமெட்ரிக் தகவல்கள் (கைரேகை மற்றும் முக அடையாளம்) இன்றி அணுக முடியாத வகையில் வடிவமைத்திருக்கிறது ஆப்பிள்.
இரண்டாவது, ஆப்பிள் மியூசிக் சேவையில் collaborative playlists வசதியை இந்த ஐஓஎஸ் 17.3 அப்டேட்டில் வழங்கவிருக்கிறது ஆப்பிள். இந்த வசதியை ஐஓஎஸ் 17.2 அப்டேட்டிலேயே அந்நிறுவனம் வழங்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அப்டேட்டில் இந்த collaborative playlists வசதியை அந்நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.