செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்திய மணமக்களின் படங்கள் - பொதுமக்களின் கருத்து?
சமீபத்தில், டெல்லியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கிய படங்களைப் பகிர்ந்தார். அதில், வெவ்வேறு இந்திய மாநிலங்களில் இருந்து வரும் ஆண்களும் பெண்களும் 'ஒரே மாதிரியாக' எப்படி இருப்பார்கள் என்பதை சித்தரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, மற்றொரு ட்விட்டர் பயனர், வெவ்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த திருமண ஜோடிகள் எப்படி இருப்பர் என்பதை கற்பனையாக, AI உதவியுடன் பகிர்ந்தார். இந்திய மாநிலங்களில் உள்ள மணமக்களின் பிரதிநிதித்துவ படங்கள் வைரலானது. சிலர் அந்த முயற்சியை பாராட்டினாலும், பலர் அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த பிரதிநிதித்துவ படங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை அல்ல என்றும் குறிப்பிட்டனர்.
AI -யால் உருவாக்கப்பட்ட மணமக்களின் படங்கள்
AI -யால் உருவாக்கப்பட்ட மணமக்களின் படங்கள்
இந்த புகைப்படத்தில், பஞ்சாப், பீகார், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த தம்பதிகள் உள்ளனர். பகிரப்பட்ட சில வினாடிகளில், வைரல் ஆன அவரது ட்வீட், விரைவில் கண்டனங்களை ஈர்த்தது. இன பேதங்களை, அபத்தமான முறையில் பிரதிபலிப்பதாகவும், குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு, நிற பேதங்கள் மற்றும் சமூக பேதங்கள் காட்டப்பட்டுள்ள விதத்தையும் கண்டித்தனர்.