இன்ஸ்டாகிராமில் பெண் அரசியல்வாதிகளுக்கு எதிராக வன்மம் நிறைந்த கருத்துக்கள்; அதிர்ச்சி அறிக்கை
மெட்டாவின் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், அமெரிக்காவில் பெண் அரசியல்வாதிகளை நோக்கிய தவறான கருத்துகளை நீக்கத் தவறியதற்காக விமர்சிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வெறுப்பை எதிர்க்கும் மையம் (சிசிடிஹெச்) என்ற இலாப நோக்கற்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பெண் அரசியல்வாதிகளின் பதிவுகளில் 5,00,000க்கும் மேற்பட்ட கருத்துகளை அந்த அமைப்பு ஆய்வு செய்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிசிடிஹெச் அறிக்கை 20,000க்கும் மேற்பட்ட கருத்துகளை "நச்சு" என அடையாளம் கண்டுள்ளது. இதில் 1,000 கருத்துக்கள் பாலியல் மற்றும் இனவெறி துஷ்பிரயோகத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில், இன்ஸ்டாகிராம் அதன் சொந்த சமூகத் தரத்தை மீறிய 93% தீங்கு விளைவிக்கும் கருத்துகளை அகற்றத் தவறிவிட்டது.
அறிக்கைக்கு மெட்டாவின் பதில்
சிசிடிஹெச் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்தக் கருத்துக்களைப் புகாரளித்தனர். ஆனால் மெட்டா அவர்களில் பெரும்பாலோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டறிந்தனர். இந்நிலையில், சிசிடிஹெச் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, பயனர்கள் தங்கள் பதிவுகளில் கருத்துகளை நிர்வகிக்கும் கருவிகளை வழங்கியுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. மெட்டாவின் பெண்கள் பாதுகாப்புத் தலைவரான சிண்டி சவுத்வொர்த் ஒரு அறிக்கையில், "நாங்கள் கருவிகளை வழங்குகிறோம். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் தங்கள் பதிவுகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் புண்படுத்தும் கருத்துகள், சொற்றொடர்கள் அல்லது எமோஜிகளை தானாக மறைக்கலாம்." என்று தெரிவித்துள்ளார். மேலும், சிசிடிஹெச் அறிக்கையை மதிப்பாய்வு செய்து, அவர்களின் கொள்கைகளை மீறும் எந்தவொரு உள்ளடக்கத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.