LOADING...
அல்சைமர் மற்றும் புற்றுநோய்க்கு தீர்வு காண்பதில் புதிய முன்னேற்றம்: இந்திய விஞ்ஞானிகளின் சாதனை!
அல்சைமர் மற்றும் புற்றுநோய்க்கு புதிய தீர்வு காண்பதில் இந்திய விஞ்ஞானிகளின் சாதனை

அல்சைமர் மற்றும் புற்றுநோய்க்கு தீர்வு காண்பதில் புதிய முன்னேற்றம்: இந்திய விஞ்ஞானிகளின் சாதனை!

எழுதியவர் Sekar Chinnappan
Dec 19, 2025
02:36 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் (JNCASR) சேர்ந்த விஞ்ஞானிகள், மனித செல்களில் உள்ள 'ஆட்டோபேஜி' (Autophagy) எனப்படும் சுய-சுத்திகரிப்பு செயல்பாட்டில் ஒரு முக்கியமானத் தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். செல்களில் உள்ள சேதமடைந்தப் பகுதிகளை அகற்றும் இந்தச் செயல்முறை சீராக நடக்காவிட்டால், அது அல்சைமர், பார்கின்சன் மற்றும் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். இந்திய விஞ்ஞானிகளின் இந்தத் தேடல், இத்தகைய நோய்களுக்கான வருங்காலச் சிகிச்சைகளில் ஒரு பெரியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஸோசிஸ்ட் காம்ப்ளக்ஸ்

செல்களின் குப்பைப்பைத் தொழிற்சாலை

செல்களில் உள்ள குப்பைகளை (சேதமடைந்த புரதங்கள்) மூட்டை கட்டி வெளியேற்ற 'ஆட்டோபாகோசோம்' (Autophagosomes) எனப்படும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இதை விஞ்ஞானிகள் 'குப்பைப்பை' (Trash bag) என்று அழைக்கிறார்கள். இந்த பையை உருவாக்குவதில் 'எக்ஸோசிஸ்ட் காம்ப்ளக்ஸ்' (Exocyst complex) என்ற 8 புரதங்கள் கொண்ட குழு முக்கியப் பங்கு வகிப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதில் 7 புரதங்கள் அந்தப் பையை முழுமையாக உருவாக்கி, கழிவுகளைச் சரியாக மூடுவதில் உதவுகின்றன. இந்த புரதங்கள் இல்லையென்றால், செல்களில் கழிவுகள் தேங்கிப் பாதிப்பை உண்டாக்குகின்றன.

சிகிச்சை

சிகிச்சையில் ஏற்படும் மாற்றங்கள்

புற்றுநோயைப் பொறுத்தவரை, ஆட்டோபேஜி செயல்முறை ஆரம்பத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ஆனால் சில நேரங்களில் புற்றுநோய் செல்கள் தப்பிப் பிழைக்க இதே முறையைப் பயன்படுத்துகின்றன. இந்தச் செயல்முறை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், நரம்பியல் குறைபாடு உள்ளவர்களின் செல்களில் மீண்டும் சமநிலையைக் கொண்டு வரவும் புதிய மருந்துகளை உருவாக்க முடியும். இந்த ஆய்வின் முடிவுகள் 'புரசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்' (PNAS) என்ற சர்வதேச இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement