உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பின்தங்கும் இந்தியா
உலகளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது இந்தியா. டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ உட்பட பல்வேறு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளவில் டாப் 10 இடங்களைப் பிடித்திருக்கின்றன. இந்தியாவின் GDP-யில் 9.3% பங்களிப்பானது தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்தே வருகிறது. ஆனால், தகவல் தொழில்நுட்பத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலான செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் எந்தளவிற்கு இருக்கிறது. உலகளவில் புதிய செயற்கை நுண்ணறிவுப் புரட்சி ஏற்பட்டு வரும் இந்த வேளையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளிடம் பின்தங்குகிறது இந்தியா.
செயற்கை நுண்ணறிவுப் புரட்சி:
நிதி, சில்லறை வணிகம் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சீனா புதுமைகளைப் புகுத்தி மேம்படுத்தி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மற்றும் ஏற்றுக் கொள்ளலில் மிகமிக மெதுவாக இருக்கிறது இந்தியா. சீனாவில் அனைத்து வகைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் 50 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் 4 பில்லியனுக்கும் குறைவான அளவே முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. 2030ம் ஆண்டிற்குள் உலகளாவிய GDPயில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் பங்களிப்பு 15 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இது தற்போதைய இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த GDP அளவை விட அதிகம்.
என்ன செய்ய வேண்டும் இந்தியா?
தற்போதைய செயற்கை நுண்ணறிவுப் புரட்சியினை அமெரிக்காவும், சீனாவுமே முன்னின்று நடத்திச் செல்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பின்னடைவது, டிஜிட்டலாக அமெரிக்கா மற்றும் சீனாவிடம் நாம் அடிபணிவதற்கு வழிவகுக்கும். போதிய அளவு செயற்கை நுண்ணறிவுக் உட்கட்டமைப்பு மற்றும் அரசின் தலையீடு இல்லாததே இந்தத் துறையில் இந்தியா பின்னடைவை சந்திப்பதற்கான காரணமாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா முன்னெடுக்கும் புதிய முன்னெடுப்புகளும் வெற்றிகரமான அல்லது திருப்திகரமான முடிவுகளையோ, செயல்பாடுகளையோ கொடுப்பதில்லை. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்னும் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை சரியாகப் பயன்படுத்தி, உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலும் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டியது மிக மிக அவசியம்.