LOADING...
வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு திட்டம்?
மத்திய அரசு இத்திட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது

வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு திட்டம்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 01, 2026
05:41 pm

செய்தி முன்னோட்டம்

வாட்ஸ்அப், பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் நோக்கில் தங்களது மொபைல் எண்களைப் பகிராமல் Username மூலம் மற்றவர்களுடன் இணைவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தனியுரிமை மாற்றம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அதே வேளையில், இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கடுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் இது வந்துள்ளது. இந்த புதிய முறையால் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, மத்திய அரசு இத்திட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

சைபர் மோசடி

சைபர் மோசடி குறித்த மத்திய அரசின் கவலைகள்

மத்திய அரசு வட்டாரங்களின்படி, வாட்ஸ்அப்பின் இந்த புதிய User ID அம்சம் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைக்கும் முன்பே அதன் பாதுகாப்பு அம்சங்களை அரசு ஆய்வு செய்யவுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணமோசடி மற்றும் போலி கணக்குகள் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில், மொபைல் எண்களுக்குப் பதிலாக யூசர்நேம் முறையை கொண்டு வரும்போது, குற்றவாளிகளை கண்டறிவதில் சைபர் கிரைம் போலீசாருக்குப் புதிய சவால்கள் எழக்கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த ஆய்வில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அதன் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

செயல்பாடு

புதிய யூசர்நேம் அம்சம் எவ்வாறு செயல்படும்

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த யூசர்நேம் அம்சம் முற்றிலும் பயனர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே செயல்படும். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான தனித்துவமான யூசர்நேம்களை 35 எழுத்துக்கள் வரை உருவாக்கிக் கொள்ளலாம். மேலும், பிரபலங்கள் மற்றும் பொது பிரமுகர்களின் பெயர்களை போலியாக பயன்படுத்துவதை தடுக்க சில முக்கியப் பெயர்களை வாட்ஸ்அப் முடக்கி வைத்துள்ளது. இந்த அம்சம் முதற்கட்டமாக மொபைல் செயலிகளில் மட்டுமே கிடைக்கும் என்றும், வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப் செயலிகளில் உடனடியாக கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

எச்சரிக்கை

பாதுகாப்பு அடுக்குகள் மற்றும் நிபுணர்களின் எச்சரிக்கை

இந்த புதிய முறையின் மூலம் புதிய நபர்களுடன் பேசும்போது மொபைல் எண்களை மறைக்க முடியும் என்றாலும், அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் அல்லது அரசு முகமைகளை போல போலி யூசர்நேம்களை உருவாக்கி ஏமாற்ற வாய்ப்புள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்குப் பதிலளித்துள்ள வாட்ஸ்அப், முறைகேடுகளை தடுக்க பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளை வைத்துள்ளதாகவும், கூடுதலாக 'Username Key எனப்படும் எண்களாலான குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது. எனினும், இந்தியத் தொலைத்தொடர்பு சட்டங்களின்படி கணக்குகள் சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், அரசு இதற்கான இறுதி முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளது.

Advertisement