எலான் மஸ்கின் எக்ஸ் தளம் மூலம் ஆபாசம்; 72 மணி நேரக் கெடு விதித்த இந்திய அரசு
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியான க்ரோக் ஏஐ (Grok AI) மூலம் பெண்களுக்கு எதிரான ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதாகக் கூறி, மத்திய அரசு அந்நிறுவனத்திற்குத் திட்டவட்டமான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பியுள்ள இந்த நோட்டீஸில், அடுத்த 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐடி சட்டங்கள் 2000 மற்றும் 2021இன் படி, சமூக வலைதளங்கள் தங்களின் தளத்தில் சட்டவிரோத உள்ளடக்கங்களைத் தவிர்க்க வேண்டிய கடமையை எக்ஸ் தளம் தவறவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புகார்
புகாரின் பின்னணி
சிவசேனா (யுபிடி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், எக்ஸ் தளத்தில் உள்ள க்ரோக் ஏஐ கருவியைப் பயன்படுத்திப் பல ஆண்கள், பெண்களின் புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து ஆபாசப் படங்களாக மாற்றுவதாகப் புகார் அளித்தார். இது பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைப்பதாகவும், தனியுரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எக்ஸ் தளம் எதிர்கொள்ளும் ஆபத்துகள்
மத்திய அரசின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான எச்சரிக்கைகள்
மத்திய அரசின் இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறினால், எக்ஸ் தளம் பெற்றுள்ள பாதுகாப்பு அந்தஸ்தை (Safe Harbour Protection - Section 79) இழக்க நேரிடும். இதன் பொருள், பயனர்கள் பதிவிடும் சட்டவிரோத கருத்துகளுக்கு எக்ஸ் நிறுவனமே சட்டரீதியாகப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஆபாசப் படங்களை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்களின் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும். க்ரோக் ஏஐ கருவியின் பாதுகாப்பை உடனடியாக மேம்படுத்தி, இதுபோன்ற உள்ளடக்கங்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும். பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பதைத் தடுக்கும் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.