ராணுவ பயன்பாட்டிற்கான முதல் செமிகண்டக்டர் ஆலையை இந்தியாவில் அமைக்க அமெரிக்கா-இந்தியா முடிவு
ராணுவ வன்பொருள் மற்றும் அடுத்த தலைமுறை தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படும் சிப்களை உற்பத்தி செய்யும் தேசிய பாதுகாப்பு செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. சனிக்கிழமை (செப்டம்பர் 21) வில்மிங்டனில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க கூட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. மோடி-பிடென் பேச்சுவார்த்தைகள் பற்றிய வெள்ளை மாளிகை அறிக்கையில், இரு தலைவர்களும் செமிகண்டக்டர் திட்டத்தை வாட்டர்ஷெட் தருணம் என்று புகழ்ந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் இந்தியாவுடன் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழில்நுட்பங்களுக்கு கூட்டுச்சேர ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறை என்றும், இது சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
தேசிய பாதுகாப்பிற்கான உலகின் முதல் மல்டி மெட்டீரியல் தொழிற்சாலை
அகச்சிவப்பு, காலியம் நைட்ரைடு மற்றும் சிலிக்கான் கார்பைடு அடிப்படையிலான செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் நிறுவப்படும் இந்த தொழிற்சாலை இந்தியா செமிகண்டக்டர் மிஷனின் ஒரு அங்கமாக உருவாக்கப்படுகிறது. மேலும், பாரத் செமி, 3ஆர்டிடெக் மற்றும் அமெரிக்கா விண்வெளிப்படை இடையேயான மூலோபாய தொழில்நுட்ப கூட்டாண்மை மூலம் செயல்படுத்தப்படும். இந்த தொழிற்சாலை இந்தியாவின் முதலாவது மட்டுமல்லாது, தேசிய பாதுகாப்பிற்கான உலகின் முதல் மல்டி மெட்டீரியல் தொழிற்சாலைகளில் ஒன்றாகும் என்று மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தெரிவித்தனர். இந்த திட்டம் சிப் உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பரஸ்பர நன்மை பயக்கும் இணைப்புகளை மேம்படுத்தும் என்று அது கூறியது.