LOADING...
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து ஏஐ துறையில் உலகின் மூன்றாவது போட்டித்தன்மை மிகுந்த நாடாக மாறியது இந்தியா
ஏஐ துறையில் உலகின் மூன்றாவது போட்டித்தன்மை மிகுந்த நாடாக மாறியது இந்தியா

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து ஏஐ துறையில் உலகின் மூன்றாவது போட்டித்தன்மை மிகுந்த நாடாக மாறியது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Dec 14, 2025
03:44 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகிலேயே மூன்றாவது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் தரவரிசை உலகளாவிய ஏஐ அரங்கில் இந்தியாவின் அதிவேக வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டுகிறது. பல்கலைக்கழகத்தின் குளோபல் ஏஐ வைப்ரன்சி டூலின் விசுவல் கேப்பிடலிஸ்ட் வரைபடம் அளித்த தரவுகளின்படி, இந்தியா 21.59 மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு ஏஐ நாடுகளாக அமெரிக்கா (78.6 மதிப்பெண்) மற்றும் சீனா (36.95 மதிப்பெண்) உள்ளன. மதிப்பெண்களுக்கு இடையே உள்ள இந்த இடைவெளி, இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போட்டியிடுவதற்கு இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைக் குறிக்கிறது.

அளவீடு

போட்டித்தன்மை மிகுந்த நாடுகளுக்கான அளவீடு காரணிகள்

இருப்பினும், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்டப் பல முக்கிய நாடுகளின் மதிப்பெண்களை விட இந்தியாவின் மதிப்பெண் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருவி, ஏஐ துறையில் ஒரு நாட்டின் போட்டித்தன்மையை அளவிடத் திறமையாளர்களின் இருப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முதலீடு, பொதுக் கொள்கை மற்றும் கருத்து, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் தாக்கம் போன்றப் பல காரணிகளைக் கருத்தில் கொள்கிறது. இந்தியா வலுவான தொழில்நுட்பச் சூழல், முதலீடுகள் மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களின் ஆதரவுடன் இத்துறையில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.

முதலீடு

இந்தியாவில் ஏஐ துறையில் முதலீடு

சமீபத்தில், உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் ஏஐ உள்கட்டமைப்பில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதை இந்த முன்னேற்றம் உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, அமேசான் நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஏஐ, தளவாடங்கள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்புகளில் $35 பில்லியன் முதலீடு செய்வதாகவும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கிளவுட் மற்றும் ஏஐ விரிவாக்கத்திற்காக ஆசியாவிலேயே மிகப் பெரிய முதலீடாக $17.5 பில்லியன் முதலீடு செய்வதாகவும் அறிவித்துள்ளன. மேலும், இன்டெல், காக்னிசென்ட், ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்கள், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக ஒரு முக்கிய ஏஐ மையமாக இந்தியா வளர்ந்து வருவதில் உலகிற்குக் கிடைத்துள்ள நம்பிக்கையைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

Advertisement