ஜனவரி 6இல் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் லக்ராஞ்சியன் புள்ளியை அடையும் : இஸ்ரோ தலைவர்
இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியை ஜனவரி 6ஆம் தேதி அடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஒளிவட்ட சுற்றுப்பாதை எல்1இல் இருந்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட முதல் செயற்கைக்கோளான இது, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைந்தவுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை இஸ்ரோ ஆராய்ச்சி செய்யும். இதற்கிடையே, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி பாரதிய விண்வெளி நிலையம் என்ற இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது என்றும் சோம்நாத் கூறினார்.