என்விடியாவுடன் இணைந்து போதன் ஏஐ மாடல்களை அறிமுகம் செய்தது ஐஐடி மெட்ராஸ்; முக்கியத்துவம் என்ன?
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸின் போதன் ஏஐ மையம், சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா மற்றும் ஏஐ4பாரத் அமைப்புகளுடன் இணைந்து இந்திய மொழிகளுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்திய மொழிகளின் பயன்பாட்டையும் கற்றல் திறனையும் டிஜிட்டல் தளங்களில் எளிதாக்கும் நோக்கில் இந்த அதிநவீன ஏஐ தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் கல்வித் துறையை வலுப்படுத்துவதையும் பிராந்திய மொழிகளில் தரமான டிஜிட்டல் வசதிகளை வழங்குவதையும் இது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.
நான்கு மாடல்கள்
நான்கு முக்கிய ஏஐ தொழில்நுட்ப மாடல்கள்
இந்த புதிய போதன் ஏஐ தொகுப்பில் இந்திய மொழிகளுக்காக நான்கு முக்கிய ஏஐ மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.
பேச்சு அங்கீகாரத்திற்கான இண்டிக்-டிரான்ஸ்கிரைப் (Indic-Transcribe), உரையை ஒலியாக மாற்றும் இண்டிக்-ஸ்பீக் (Indic-Speak), இயந்திர மொழிபெயர்ப்புக்கான இண்டிக்-டிரான்ஸ்லேட் (Indic-Translate) மற்றும் எழுத்துக்களை டிஜிட்டலாக மாற்றும் இண்டிக்-ஓசிஆர் (Indic-OCR) ஆகியவை இதில் அடங்கும்.
இந்திய வட்டார வழக்குகள் மற்றும் உச்சரிப்புகளை மிகவும் துல்லியமாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த அனைத்து மாடல்களும் திறம்படக் கட்டமைக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பம்
என்விடியா தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு
என்விடியா நிறுவனத்தின் நீமோ (NeMo) கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட ஜிபியூ (GPU) உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி இந்த ஓபன் சோர்ஸ் மாடல்கள் மிகத் துல்லியமாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
பிராந்திய உச்சரிப்பு வேறுபாடுகளைக் கண்டறிய என்விடியாவின் நெமோட்ரான் 3.5 ஏஎஸ்ஆர் (NVIDIA Nemotron 3.5 ASR) தொழில்நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும், இந்த மாதிரிகளை வேகமாகவும் திறமையாகவும் டிஜிட்டல் தளங்களில் இயக்க என்விடியா நிறுவனத்தின் பிற மேம்பட்ட மென்பொருள் சேவைகளும் திறம்படப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கல்வித் துறை
கல்வித் துறைக்கான இலவச சேவை மற்றும் பயன்கள்
இந்த ஏஐ மாடல்கள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டிற்கான ஓபன் சோர்ஸ் கட்டமைப்பாக (Open-Weight Systems) கிடைக்கப் பெறுகின்றன.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநில அரசுகள் இதைப் பயன்படுத்தி உருவாக்கும் கல்விப் பயன்பாடுகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதன் ஏஐ அமைப்பின் இந்த முயற்சி, இந்திய மொழியியல் ஏஐ ஆராய்ச்சியை சர்வதேச அளவில் உயர்த்தவதுடன் வகுப்பறைகளுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்கும்.