மாணவர்களே அலெர்ட்; ஐஐடியில் இலவசமாக Deep Learning படிப்பு; எப்படி சேர்வது?
செய்தி முன்னோட்டம்
ஐஐடி காரக்பூர் கல்வி நிறுவனம், ஸ்வயம் (SWAYAM) தளத்துடன் இணைந்து, 2026 ஜனவரியில் தொடங்கவுள்ள Deep Learning தொடர்பான இலவச ஆன்லைன் பாடப்பிரிவுக்குப் பதிவுகளைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உள்ள படங்களை அடையாளம் காணுதல், பேச்சு அங்கீகாரம் போன்ற பணிகளைக் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் ஸ்வயம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். டாக்டர் பிரபிர் கே. பிஸ்வாஸ் கற்பிக்கும் இந்தப் பாடப்பிரிவு, இயந்திர கற்றல் (Machine Learning) கருத்துக்களுடன் தொடங்கி, கன்வல்யூஷனல் நியூரல் நெட்வொர்க்குகள் (CNN) மற்றும் ஆட்டோ என்கோடர்கள் போன்ற நவீன ஆழமான கற்றல் கட்டமைப்புகளை கற்பிக்கிறது.
பாடத்திட்டம்
பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
மருத்துவ ஸ்கேன்கள் மூலம் நோய்களைக் கண்டறிதல், வாய்ஸ் அசிஸ்டன்ட்களை இயக்குதல், தானியங்கி அமைப்புகள் மற்றும் வானிலை கணிப்பு போன்ற நிஜ உலகப் பிரச்சினைகளுக்கு Deep Learning நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தக் பாடத்திட்டம் கவனம் செலுத்துகிறது. இந்த 12 வார காலப் பாடப்பிரிவு ஜனவரி 19, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 17, 2026 வரை நடைபெறுகிறது. பதிவு செய்ய இறுதித் தேதி ஜனவரி 26, 2026 ஆகும். கணினி அறிவியல், மின் பொறியியல் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பயிலும் கல்லூரி மாணவர்கள் அடிப்படை கணித அறிவு இருந்தால் இப்பாடப்பிரிவில் சேரலாம்.
தேர்வு
சான்றிதழ் மற்றும் தேர்வு
சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள் ₹1,000 கட்டணம் செலுத்தி ஏப்ரல் 25, 2026 அன்று நேரில் நடைபெறும் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். சான்றிதழ் பெற, ஹோம் வொர்க்கில் 25 க்கு 10 மதிப்பெண்களும், தேர்வில் 75 க்கு 30 மதிப்பெண்களும் பெற வேண்டும். இப்பாடப்பிரிவில் சேர ஆர்வமுள்ளவர்கள் ஸ்வயம் இணையதளத்தின் மூலமாக தங்கள் ஜிமெயில் அல்லது மைக்ரோசாஃப்ட் ஐடியைப் பயன்படுத்திப் பதிவு செய்யலாம்.