ஐஐடி கான்பூரில் ஆறு மாத கால சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டம் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஐஐடி கான்பூரின் சி3ஐஹப் (C3iHub) ஆனது சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சைபர் பாதுகாப்பில் அதிநவீன திறன்களை வழங்கும் சிறப்பு ஆறு மாத ரெசிடென்ஷியல் படிப்பாக இது கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டத்தின் கீழ், நாட்டின் இணையப் பாதுகாப்பு தொடர்பாக வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளுக்குள் பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்களின் சிறப்புப் பிரிவு நிறுவப்படும். இந்த பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்கள் டிஜிட்டல் தளத்தை பாதுகாப்பதில் மத்திய/மாநில அமைப்புகளுக்கு உதவுவார்கள்.
இந்த பயிற்சி யாருக்கு வழங்கப்படுகிறது?
பல்வேறு மத்திய மற்றும் மாநில போலீஸ் படைகளை சேர்ந்த மொத்தம் 38 அதிகாரிகள் முதற்கட்டமாக இந்த தீவிர பயிற்சி திட்டத்தில் பங்கேற்கின்றனர். பங்கேற்பாளர்கள் இணைய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களில் விரிவான, நேரடிப் பயிற்சியைப் பெறுவார்கள். சிக்கலான இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், பாதுகாப்பு சம்பவங்களை நிர்வகிக்கவும், பல துறைகளில் வலுவான பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தவும் இது உதவும். இந்தப் பயிற்சித் திட்டம் இந்தியாவின் இணையப் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. இது திறமையான நிபுணர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம்
சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டம், டிஜிட்டல் யுகத்தில் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் கீழ் ஒரு முக்கிய முயற்சியாகும். இந்த உயர் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் இந்தியாவின் இணைய சூழலை பாதுகாப்பதிலும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பார்கள். தற்போதைக்கு மத்திய மற்றும் மாநில அரசின் பாதுகாப்பு மற்றும் போலீஸ் படைகளில் இருந்து தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த படிப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படுமா என்பது குறித்த தகவல் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.