எச்-1பி விசா & கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்தியது ஐபிஎம்; அமெரிக்காவை விட்டு வெளியேற ஊழியர்களுக்கு கெடு
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் தனது மிகப்பெரிய பிரிவான ஐபிஎம் கன்சல்டிங் பிரிவில் பெரும்பாலான பதவிகளுக்கு அமெரிக்க எச்-1பி விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள கிளைகளுக்கு இடமாற்றம் பெற்றுப் பணியாற்ற வேண்டும் அல்லது 2026 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த முடிவை எடுப்பதற்கு ஊழியர்களுக்கு 3 வாரங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இடமாற்றம் பெற விரும்பாதவர்களுக்கு 3 மாத ஊதிய இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளக் குறைப்பு
இந்தியாவிற்கு இடமாற்றம் பெற்றால் 80% வரை சம்பளக் குறைப்பு ஏற்படும் அபாயம்
அமெரிக்காவில் வழங்கப்படும் எச்-1பி விசாக்களில் சுமார் 75%-ஐ இந்தியர்களே பெறுவதால் ஐபிஎம் நிறுவனத்தின் இந்த முடிவு இந்தியத் தொழில்நுட்ப ஊழியர்களைக் கடுமையாக பாதித்துள்ளது.
நவம்பர் 19 நிலவரப்படி அமெரிக்காவிற்கு வெளியே ஐபிஎம் அறிவித்துள்ள 1,278 கன்சல்டிங் பணியிடங்களில் 1,125 பணியிடங்கள் இந்தியாவிலும் 23 சிங்கப்பூரிலும் 18 இங்கிலாந்திலும் உள்ளன.
ஆனால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இடமாற்றம் பெற்று பணியாற்றினால் சுமார் 80% வரை சம்பளக் குறைப்பு ஏற்படும் என ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்துள்ளனர்.
விசா கெடுபிடி
டிரம்ப் நிர்வாகத்தின் விசா கெடுபிடிகளும் ஐபிஎம் நிறுவனத்தின் எச்-1பி விசா சரிவும்
திறன் தேவைகள் மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் மாறியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐபிஎம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் புதிய எச்-1பி விசா மனுக்களுக்கு $1,00,000 கட்டணம் மற்றும் அதிக சம்பளம் பெறுவோருக்கு முன்னுரிமை அளிக்கும் விசா மாற்றங்கள் என டிரம்ப் நிர்வாகம் கெடுபிடிகளை அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக ஐபிஎம் நிறுவனத்தின் எச்-1பி விசா ஒப்புதல்கள் 2024 ஆம் நிதியாண்டில் கிட்டத்தட்ட 3,000 ஆக இருந்த நிலையில் 2026 ஆம் நிதியாண்டில் 1,600 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.