இந்தியாவில் 'ஹானர் 90' ஸ்மார்ட்போன் வெளியீடு மூலம் மீண்டும் கால்பதிக்கும் ஹானர்
செய்தி முன்னோட்டம்
2020ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறிய பிறகு, தற்போது தங்களுடைய புதிய 'ஹானர் 90' ஸ்மார்ட்போன் வெளியீடு மூலம் மீண்டும் இந்தியாவில் தங்களுடைய ஸ்மார்ட்போன்களை விற்பனை தொடங்கவிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர்.
இந்தியாவில் சாம்சங், மோட்டோரோலா, ரியல்மி மற்றும் விவோ ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக ப்ரீமியம் மிட்-ரேஞ்சு பிரிவில் தங்களுடைய புதிய ஹானர் 90 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
120Hz ரெப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தை வெளிப்படுத்தக்கூடிய 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவைப் பெற்றிருக்கிறது ஹானர் 90.
பின்பக்கம் 200MP முதன்மை கேமரா, 12MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ என ட்ரிபிள் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 50MP செல்ஃபி கேமராவும் ஹானர் 90-யில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஹானர்
ஹானர் 90: ப்ராசஸர் மற்றும் விலை
புதிய ஹானர் 90-யில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 ப்ராசஸரையும், ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட மேஜிக் ஓஎஸ் 7.1 இயங்குதளத்தையும் அளித்திருக்கிறது ஹானர்.
66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாக்ஸில் சார்ஜரை அந்நிறுவனம் வழங்கவில்லை.
கனெக்டிவிட்டிக்காக, இரண்டு சிம் கார்டுகள், 5G, வை-பை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், NFC மற்றும் டைப்-சி ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் ஹானர் 90-யின் 8GB/256GB வேரியன்டை ரூ.37,999 விலையிலும், 12GB/512GB வேரியன்டை ரூ.39,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது ஹானர். செப்டம்பர் 18ம் தேதி முதல் அமேசானில் இந்தப் புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது.