வேற்றுகிரக விண்வெளிப் பொருட்களைக் கண்டறிந்த ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள்
விண்வெளியில் வேற்றுகிரகவாசிகளின் இருப்பு குறித்து தேடல் மனிதர்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோம் என நம்ப மறுப்பது தான் அதற்குக் காரணம். இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள ஹார்வார்டைச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் இயற்பியலாளரான அவி லோயெப் என்பவரும், அவரது குழுவும் வேற்றுகிரகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பத்தின் சில மிச்சங்களை தாங்கள் கண்டறிந்திருப்பதாக நம்புவதாகத் தெரிவித்திருக்கின்றனர். கூடைப்பந்து அளவிலான விண்கல் ஒன்று 2014-ல் நம் வலிமண்டலத்தைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. அந்த விண்கல்லானது நமது சூரிய குடும்பத்தை சேர்ந்த விண்வெளிப் பொருளல்ல என்பதை கடந்த 2022-ல் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, தற்போது அதன் மிச்சங்களைத் தேடியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அவி லோயெப்பின் குழுவினர்.
இது வேற்றுகிரக தொழில்நுட்பமா?
காந்தம் பொருத்தப்பட்ட படகுடன், கடற்பரப்பில் கிட்டத்தட்ட 108 மைல் தூரத்திற்கு தேடலை விரிவுபடுத்தி, இறுதியாக 50 சிறிய உலோக கோள உருண்டைகளைக் கண்டறிந்திருக்கின்றனர். இந்த கோள உருண்டைகளானது ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில், ஒரு மில்லிகிராமுக்கும் குறைவான எடையைக் கொண்டிருக்கின்றன. நுண்ணோக்கியின் உதவியுடன் இந்த கோள உருண்டைகளை ஆராய்ச்சி செய்திருக்கின்றனர் அவி லோயெப்பும் அவரது குழுவினரும். ஆராய்ச்சியின் முடிவில் அந்த உருண்டைகள் நமது சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்திருக்கின்றனர். அந்தக் உருண்டைகளில் காணப்படும் உலோகக் கலவையாது நமது சூரிய குடும்பத்தில் உள்ள விண்வெளி பொருட்களில் இல்லாதது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவை வேற்றுகிரகவாசிகள் தொழில்நுட்பங்களின் மிச்சமா அல்லது இயற்கையாகக் கிடைக்கும் உலோகக் கலவையா என்பதை மேலதிக ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியவிருக்கின்றனர்.