இந்திய பள்ளி மாணவர்களின் ஸ்பேஸ் மிஷன்! பலூன் மூலம் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பி சாதனை
செய்தி முன்னோட்டம்
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் இணைந்து, பலூன் மூலம் விண்ணில் செலுத்தக்கூடிய ஒரு ராக்கெட்டை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். பொதுவாகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே கையாளும் இத்தகைய சிக்கலான தொழில்நுட்பத்தை, பள்ளி மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு பெரிய ஹீலியம் பலூன் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இந்த பலூன் ராக்கெட்டை சுமந்து கொண்டு வளிமண்டலத்தின் மேல் அடுக்கு வரை உயரே செல்லும். அங்கு காற்று மிகவும் மெல்லியதாக இருக்கும் நிலையில், பலூனில் இருந்து ராக்கெட் பிரிக்கப்பட்டு அதன் இன்ஜின் எரியூட்டப்படும்.
எரிபொருள்
எரிபொருள் செலவு குறைவு
அங்கிருந்து ராக்கெட் விண்வெளியை நோக்கிப் பாயும். இந்த முறையில் ராக்கெட்டை ஏவுவதால், புவியீர்ப்பு விசையைத் தாண்டிச் செல்லத் தேவைப்படும் எரிபொருளின் அளவு பெருமளவு குறைகிறது. இந்த ராக்கெட்டை வடிவமைக்க மாணவர்கள் சுமார் ஓராண்டிற்கும் மேலாக உழைத்துள்ளனர். இதில் சென்சார்கள், ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வளிமண்டலத்தின் வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் கதிர்வீச்சு அளவு போன்றவற்றை ஆய்வு செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சோதனையின் போது இந்த ராக்கெட் வெற்றிகரமாக இலக்கை அடைந்து, தரவுகளைச் சேகரித்து மீண்டும் பாதுகாப்பாகத் தரை இறங்கியுள்ளது.
விண்வெளி
எதிர்கால விண்வெளி ஆய்வாளர்கள்
இளம் வயதிலேயே இத்தகைய கடினமான அறிவியல் சோதனையை முன்னெடுத்த மாணவர்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் கல்வித் துறை வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். "இந்தியாவின் வருங்கால விஞ்ஞானிகள் இங்கேயே உருவாகிவிட்டார்கள்" என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விண்வெளி ஆய்வில் ஆர்வம் கொண்ட மற்ற மாணவர்களுக்கு இந்த முயற்சி ஒரு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.