சந்தா முறையில் 'Bard AI' சேவையை வழங்கத் திட்டமிட்டு வரும் கூகுள், எப்படி?
தற்போது உலகளவில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சேவையை வழங்கி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தைப் பின்பற்றி, தங்களுடைய பார்டு ஏஐ (Bard AI)யின் மேம்பட்ட வடிவத்தையும் சந்தா முறையில் வழங்கத் திட்டமிட்டு வருகிறது கூகுள். ஓபன்ஏஐ-யின் சாட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாஃப்டின் பிங் சாட்பாட்களுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட கூகுளின் பார்டு ஏஐ-யானது, பயனாளர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த மாதம் தங்களுடை மேம்பட்ட, புதிய ஜெமினி ஏஐ-யையும், பார்டு ஏயின் பயன்பாட்டுடன் இணைத்திருப்பதாக அறிவித்தது கூகுள். இந்த ஜெமினி ஏஐ-யை, நானோ, ப்ரோ மற்றும் அல்ட்ரா என மூன்று வடிவங்களாக உருவாக்கியிருக்கிறது கூகுள்.
சந்தா முறையில் கூகுளின் பார்டு ஏஐ?
ஜெமினி ஏஐயின் ப்ரோ வெர்ஷனானது, பார்டு ஏஐயின் மூலம் தற்போது பயனாளர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஜெமினி ஏஐயின் மேம்பட்ட வடிவமான அல்ட்ரா வெர்ஷனானது, ப்ரோ வெர்ஷனை விட கூடுதலான செயல்திறனைக் கொண்டிருக்கும் நிலையில், அதன் பயன்பாட்டை சந்தா முறையில் கூகுள் ஒன் (Google One) சேவைகளுடன் கூட்டுச் சேவையாக வழங்கத் திட்டமிட்டு வருகிறது கூகுள். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தப் புதிய திட்டத்தினை கூகுள் செயல்படுத்தலாம் என முன்பே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜெமினி ஏஐ அல்ட்ரா வெர்ஷனை பார்டு அட்வான்ஸூடாக பயனாளர்களுக்கு வழங்கத் திட்டமிட்டிருக்கிறது கூகுள்.
'கூகுள் ஒன்' சந்தா திட்டம்:
பயனாளர்கள் தங்களுடைய கூகுள் டிரைவ் வசதியில் கூடுதல் இடத்தைப் பெறவும், அத்துடன் கூடுதலாக சில வசதிகளைப் பெறவும் கூகுள் ஒன் என்ற சந்தா திட்டத்தை வழங்கி வருகிறது கூகுள். இந்த சந்தா சேவையுடனேயே, ஜெமினி ஏஐயின் அல்ட்ரா வெர்ஷனுடன் கூடிய பார்டு அட்வான்ஸூடு ஏஐ மாடலை வழங்க கூகுள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் குறைந்தபட்சமாக மாதம் ரூ.160-ல் இருந்து கூகுள் ஒன் சந்தா சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், விலை குறைவான இந்த கூகுள் ஒன் சந்தா திட்டத்துடனும் பார்டு அட்வான்ஸூடு வசதியை கூகுள் வழங்குமா என்று தெரியவில்லை. விலை உயர்ந்த திட்டங்களுடன் மட்டுமே பார்டு அட்வான்ஸூடு வசதியை கூகுள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.