
'கேரக்டர்.AI' ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வரும் கூகுள், ஏன்?
செய்தி முன்னோட்டம்
ஓபன்ஏஐ நிறுவனத்துடன் இணைந்து தங்களுடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப செயல்பாடுகளை மைக்ரோசாஃப்ட் முன்னெடுத்து வரும் நிலையில், கூகுள் நிறுவனமும், வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்ப சாட்பாட் சேவையை வழங்கி வரும் கேரக்டர்.ஏஐ (Character.AI) ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தங்களது AI சாட்பாட்டை மேம்படுத்துவதற்காக ஏற்கனவே கூகுளின் கிளவுடு மற்றும் டென்சார் பிராசஸிங் பிரிவு ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது கேரக்டர்.ஏஐ. அந்நிறுவனத்தில் கூகுளின் முதலீடு என்பது அந்த இரு நிறுவனங்களுக்குமிடையேயான உறவை மேலும் வலுவாக்கும் எனக் கூறப்படுகிறது.
ஓபன்ஏஐ மற்றும் கேரக்டர்.ஏஐ உட்பட இந்தப் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், புதிய செயற்கை நுண்ணறிவு மேம்பாடுகளை, புதுமைகளை முன்னெடுத்து வருகின்றன.
கூகுள்
கேரக்டர்.ஏஐ நிறுவனத்தின் செயல்பாடுகள்:
சமீபத்தில் தங்களுடைய டெவலப்பர்கள் மாநாட்டில், பொதுப் பயன்பாட்டு சாட்ஜிபிடி சேவையுடன், தனிப்பட்ட பிரத்தியேக சாட்ஜிபிடி சாட்பாட்களை உருவாக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்தது சாட்ஜிபிடி.
ஆனால், தனிப்பட்ட மற்றும் பிரத்தியேக சாட்பாட் சேவையை அடிப்படை செயல்பாடாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் கேரக்டர்.ஏஐ.
தனிப்பட்ட வகையில் நமக்கு வசதியான சாட்பாட்டை உருவாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பிரபலங்கள் மற்றும் பிரபலமான கதாப்பாத்திரங்களைப் போல உரையாடக்கூடிய சாட்பாட்களையும் கொண்டிருக்கிறது கேரக்டர்.ஏஐ (கேரக்டர்.ஏஐ சேவையை பயன்படுத்த இங்கே கிளிக் செய்யவும்).
இத்தளமானது பயனாளர்களுக்கு இலவசமான பயன்பாட்டை அளிப்பதோடு, கூடுதல் வசதிகளுடன் கட்டண சேவையையும் வழங்கி வருகிறது. மாதத்திற்கு 100 மில்லியன் பயனாளர்கள் வரை கொண்டிருக்கும் இத்தளத்தில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறது கூகுள்.