AI வசதியுடன் கூடிய தேடுபொறி சேவை.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது கூகுள்!
கடந்த சில நாட்களுக்கு முன் AI வசதியுடன் கூடிய தங்களுடைய புதிய பிங் தேடுபொறியை அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். AI சாட்பாட் வசதி, டெக்ஸ்ட்-டூ-இமேஜ் சேவையை வழங்கக்கூடிய AI புகைப்படம் உருவாக்கும் வசதி என ஆல்-இன்-ஒன்னாக உருவெடுத்து நிற்கிறது மைக்ரோசாஃப்டின் பிங் சேவை. தேடுபொறி சேவையில் தற்போது வரை கூகுளே பெரும்பான்மையான சந்தைமதிப்பைப் பிடித்து முதலிடத்தில் இருக்கிறது. இன்னும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தேடுபொறி தளத்தில் போட்டிக்கு ஆளின்றி தனித்து இயங்கி வந்தது கூகுள். ஆனால், AI-யின் வரவு கூகுளின் ஆதிக்கத்தை உடைக்கக்கூடிய கருவியாக வந்து நிற்கிறது. எனவே, தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட மைக்ரோசாஃப்ட் மற்றும் ஓபன்ஏஐ-க்கு போட்டியாக தங்களுடைய AI சேவைகளையும் களத்தில் இறக்கி வருகிறது கூகுள்.
புதிய வசதிகளுடன் கூகுள் தேடுபொறி:
மைக்ரோசாஃப்டின் புதிய பிங் தேடுபொறி வெளியீட்டிற்குப் பிறகு, மேம்படுத்தப்பட்ட AI வசதிகளுடன் கூடிய தேடுபொறி சேவையை தாங்களும் வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது கூகுள். இதனைத் தொடர்ந்து, புதிய வசதிகளுடன் கூடிய புதிய தேடுபொறியை கூகுள் விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. கூகுளின் புதிய தேடுபொறி சேவையின் தேடல் முடிவுகளில் தற்போது இருப்பது போல வெறும் இணையதளங்களுக்கான லிங்க்குகள் மட்டுமின்றி, நம் தேடலுக்குத் தொடர்புடைய சமூக வலைத்தளப் பதிவுகள், ஷார்ட் வீடியோக்கள் ஆகியவையும் சேர்த்தே தேடலின் முகப்புப் பக்கத்தில் கொடுக்கவிருக்கிறது கூகுள். இது மட்டுமில்லாமல் பிங் வழங்குவது போலவே AI சாட்பாட் வசதியையும் தேடுபொறி சேவையுடன் சேர்த்து கூகுள் வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.