வாட்ஸ்அப்பில் ஏற்பட்ட கோளாறு: சரிசெய்யப்பட்டதாக ட்வீட் செய்திருக்கும் கூகுள்
வாட்ஸ்அப் செயலியானது பயனர்களின் அனுமதி இல்லாமலேயே ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை உபயோகிப்பதாக கடந்த மாதம் ட்விட்டரில் சில பயனர்கள் பதிவிட்டிருந்தனர். இது தொடர்பாக எலான் மஸ்க்கும் ட்வீட் செய்ததை தொடர்ந்து, பலரும் வாட்ஸ்அப்பின் இந்தப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர். இந்த பிரச்சினை தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனமும் தங்கள் தரப்பு வாதத்தைப் பதிவு செய்யும் விதமாக விளக்கமளித்து ட்வீட் செய்திருந்தது. அந்த ட்வீட்டில், மேற்கூறிய பிரச்சினையானது வாட்ஸ்அப்பில் இல்லை எனவும், ஆண்ட்ராய்டு தனியுரிமை டேஷ்போர்டில் ஏற்பட்டுள்ள கோளாறின் காராணமாகவே இந்தப் பிரச்சினை எழுந்திருக்கிறது எனவும் விளக்கமளித்திருந்தது.
சரி செய்யப்பட்ட பிரச்சினை:
இந்நிலையில், தற்போது அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டிருப்பதாகக் கூறி ட்வீட் ஒன்று ஆண்டிராய்டு தரப்பிலிருந்து பதிவிடப்பட்டிருக்கிறது. சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும், வாட்ஸ்அப் செயலியானது தேவையில்லாத நேரத்தில் மைக்ரோபோனை உபயோகிப்பதாக தவறாகக் காட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் கூறியது போல தங்களுடைய தனியுரிமை டேஷ்போர்டில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள். இந்தக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், இந்தக் கோளாறை சரி செய்வதற்காக ஒத்துழைத்த வாட்ஸ்அப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறது கூகுள். மேலும், வாட்ஸ்அப்பின் புதிய வெர்ஷனை அப்டேட் செய்யவும் பயனர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.