அமெரிக்க பயனாளர்களுக்கு AI வசதியுடன் கூடிய 'NotebookLM' சேவையை அறிமுகப்படுத்திய கூகுள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வசதியுடன் இயங்கக்கூடிய வகையிலான 'நோட்புக்LM' (NotebookLM) சேவையினை அமெரிக்க பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். இந்த சேவை குறித்த அறிவிப்பானது இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. தற்போது கூகுளின் ப்ளாக்ஷிப் AI தொழில்நுட்பமான ஜெமினியின் உதவியுடன் இயங்கும் திறனைப் பெற்றிருக்கிறது நோட்புக்LM. இந்த நோட்புக்LM சேவையினை ஒரு பெர்சனல் அசிஸ்டன்டைப் போலவும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருக்கும் கூகுள், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் துறையைச் சார்ந்து பல்வேறு வகையில் இந்தச் சேவையின் மூலம் பலன் பெற முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
என்னென்ன செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது நோட்புக்LM?
தினசரி டைரி எழுதும் பழக்கம் கொண்டவர்கள் அல்லது முக்கியமான விஷயங்களை தகவல்களை நோட்ஸில் எழுதிவைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள் இந்த நோட்புக்LM சேவையைப் பயன்படுத்தலாம். பின்னர் தேவைப்படும் போது நாம் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளில் இருந்து தகவல்களைப் பெற, கேள்விகள் கேட்டால் போதும். அந்தத் தகவல்களை ஆராய்ந்து நமக்குத் தேவையான பதில்களை நோட்புக்LM சேவை வழங்கும். அக்கவுண்டன்ட் மற்றும் மார்கெட்டிங் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள். எனினும், சில நேரங்களில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு நோட்புக்LM வழங்கும் தகவல்களில் துல்லியம் இருக்காது எனவும், நாம் அதனை சரிபார்த்துக் கொள்வது நல்லது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது கூகுள்.