மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கூகிள் AI: பீட்சா ரெசிபியில் சாஸிற்கு பதில் Gum பரிந்துரைத்த கொடுமை
கூகுளின் "AI ஓவர்வ்யூஸ்" என்று அழைக்கப்படும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தேடல் முடிவுகள், மீண்டும் ஒருமுறை பயனர் கேள்விகளுக்கு வினோதமான மற்றும் தவறான பதில்களை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளது. பீட்சாவில் சாஸிற்கு பதிலாக, பசை சேர்ப்பதை பரிந்துரைப்பது மற்றும் புகையிலையின் ஆரோக்கிய நன்மைகளை ஊக்குவித்தல் போன்ற சம்பவங்களை சமூக வலைத்தளத்தில் பயனர்கள் மேற்கொடிட்டு விமர்சித்து வருகின்றனர். இந்த விசித்திரமான பதில்களை சில விமர்சகர்கள் "பேரழிவு அம்சம்" என்று குறிப்பிட்டனர். ஒரு சிலர் இனி AI -ஐ "நம்ப முடியாது" என்றும் தெரிவித்தனர்.
AI ஓவர்வ்யூஸ் 1 பில்லியன் பயனர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
சிக்கலான பயனர் கேள்விகளுக்கான விளக்கங்களை தானாக உருவாக்கும் AI ஓவெர்வ்யூ அம்சம் கடந்த வாரம் அனைத்து அமெரிக்க பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும் தற்போதைய சிக்கல்கள் தாண்டி, இது ஆண்டின் இறுதிக்குள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்ற வலைத்தளங்களுக்கான இணைப்புகளை திறம்பட தரமிறக்குவதன் மூலம் பாரம்பரிய ஊடகங்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியதற்காக இந்த அம்சம் விமர்சிக்கப்பட்டது.
வினோதமான பரிந்துரைகளும் தவறான தகவல்களும் கவலைகளை எழுப்புகின்றன
AI ஓவர்வியூவின் சர்ச்சைக்குள்ளான இந்த ஆலோசனை, சீஸ் பீட்சாவில் ஒட்டவில்லை என்ற தேடலுக்குப் பதிலாக வந்தது. அந்த கேள்விக்கு, கூகிளின் AI ஆனது, 1/8 கப் நச்சுத்தன்மையற்ற பசையை சாஸில் சேர்க்க பரிந்துரைத்தது. அதேபோல புகையிலையின் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள் பற்றிய தவறான தகவல்கள் கூட இதே போன்ற சொதப்பிய சம்பவம் ஆகும். விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கூகுள் செய்தித் தொடர்பாளர், இந்த எடுத்துக்காட்டுகள் பொதுவாக மிகவும் அரிதான கேள்விகள் என்றும், பெரும்பாலான மக்களின் அனுபவங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்று கூறினார். AI ஓவர்வ்யூக்களில், கொள்கை மீறும் உள்ளடக்கம் தோன்றுவதைத் தடுப்பதே தங்கள் அமைப்புகளின் நோக்கம் என்றும், அத்தகைய உள்ளடக்கம் தோன்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.