'Search Labs' வசதியை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது கூகுள்!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கூகுள் தேடுபொறி வசதியை அறிமுகப்படுத்தவிருப்பதாக இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற I/O நிகழ்வில் அறிவித்திருந்தது கூகுள். தற்போது அதற்கான பீட்டா வெர்ஷனைப் போல 'Search Labs' வசதியை கூகுள் பயனர்களும் பயன்படுத்தும் வகையில் தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் தங்கள் தேடுபொறி சேவையில் கூகுள் பொதுப் பயனர்களுக்கு வெளியிடும் முன்பே Search Labs-க்கு பதிவு செய்திருக்கும் பயனர்கள் பயன்படுத்தப் பார்க்க முடியும். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் என அனைத்துப் பயனர்களுக்கும் இந்த வசதி தற்போது தொடங்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்து கூகுள். ஆனால், இந்தியாவில் இருந்து நாம் முயற்சி செய்த போது நம்மால் பதிவு செய்ய முடியவில்லை. அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறதாம்.
புதிய தேடுபொறி வசதிகள்:
கூகுள் அறிவித்திருந்த, AI தொழில்நுட்பத்துடன் கூடிய தேடுபொறி வசதிகள் இன்னும் பொதுப்பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால், Search Labs-க்கு பதிவு செய்த பயனர்களால் அந்த வசதியை தற்போது பயன்படுத்திப் பார்க்க முடியும். AI வசதியுடன் கூடிய பிங் தேடுபொறியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. எனவே, AI தொழில்நுட்பத்துடன் கூடிய தேடுபொறி வசதியை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கூகுள். தங்களுடைய க்ரோம் உலாவியின் மூலம் தேடுபொறி சந்தையில் 90% பங்கை தன்வசம் வைத்திருக்கிறது கூகுள். புதிய AI வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட தேடுபொறி சேவையை அந்நிறுவனம் அளிக்கவிருக்கிறதாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் துல்லியமாக விடைகளைத் தேடித் தரும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறதாம் புதிய உலாவி.