Page Loader
தகவல்களைத் திருடும் செயலி.. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்.. பயனர்களுக்கும் எச்சரிக்கை!
தகவல்களைத் திருடும் ஆண்ட்ராய்டு செயலி

தகவல்களைத் திருடும் செயலி.. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்.. பயனர்களுக்கும் எச்சரிக்கை!

எழுதியவர் Prasanna Venkatesh
May 25, 2023
03:04 pm

செய்தி முன்னோட்டம்

ட்ரோஜனால் பாதிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி ஒன்று கண்டறியப்பட்டு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ESET என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் இந்த ட்ரோஜான் பாதிக்கப்பட்ட செயலியைக் கண்டறிந்து, அதுகுறித்து கூகுளுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறது. மேலும், இது குறித்த அறிக்கை ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்ட "iRecorder" என்ற மொபைல் ஸ்கிரீனை ரெக்கார்டு செய்யப் பயன்படுத்தும் செயலியில் AhMyth என்ற ட்ரோஜன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 2021-ல் முதன் முதலாக இந்த செயலி பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஒரு வருடம் கழித்தே AhMyth ட்ரோஜானானது இந்த செயிலியின் அப்டேட் மூலம் பரப்பப்பட்டிருப்பதாக தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ESET.

சைபர் பாதுகாப்பு

என்ன வகையான பாதிப்பு ஏற்படும்: 

இந்த ட்ரோஜன் பாதித்த செயலியைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் உள்ள புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், ஆடியோ ஃபைல்கள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தையும் இதனை உருவாக்கியவர்களின் சர்வர்களுக்கு இந்த ட்ரோஜனால் அனுப்ப முடியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தகவல் திருட்டு தான் இந்த ட்ரோஜனின் முதன்மையான குறிக்கோள். இந்த செயலியை 50,000 ஸ்மார்ட்போன்களில் பயனர்கள் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். இந்த செயலியைப் பயன்படுத்தும் பயனர்கள் உடனடியாக தங்கள் மொபைல்களில் இருந்து அதனை நீக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையான ட்ரோஜன்களை அரசுக்கு எதிராக செயல்படும் நிறுவனங்கள் அரசின் தகவல்களைத் திருடுவதற்காக முன்னர் பயன்படுத்தியிருக்கின்றன. மேலும், தெற்காசியாவில் தான் இதன் பயன்பாடு அதிகம் இருந்திருக்கிறது.