மாணவர்களுக்கு கூகுளின் மெகா ஆஃபர்! 1 வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக கூகுள் ஏஐ திட்டம்; முழு விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் தற்போது புதிய கல்வியாண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவசமாகத் தங்களது பிரீமியம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திட்டங்களை வழங்குவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு மாதத்திற்கு $19.99 மதிப்பிலான கூகுள் ஏஐ புரோ திட்டமும், இந்தியா உட்பட 140க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கூகுள் ஏஐ பிளஸ் திட்டமும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்த இலவச சலுகை ஆகஸ்ட் 19 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்திய மாணவர்கள்
இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கும் கூகுள் ஏஐ பிளஸ் நன்மைகள்
இந்தியாவில் வழக்கமாக மாதத்திற்கு ரூ.399 (ஆண்டிற்கு ரூ.4,788) கட்டணத்தில் வழங்கப்படும் கூகுள் ஏஐ பிளஸ் திட்டம், மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் ஜெமினி ஆம்னி மாடலுக்கான அணுகல், சாதாரண பயனர்களை விட 2 மடங்கு கூடுதல் பயன்பாட்டு வரம்புகள், 400 ஜிபி கூகுள் கிளவுட் சேமிப்பகம் மற்றும் ஜிமெயில், கூகுள் டாக்ஸ் போன்ற செயலிகளில் ஏஐ உதவி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஸ்டூடன்ட் ஹப்
பிரத்யேக ஸ்டூடன்ட் ஹப் மற்றும் படிப்புக்கான ஏஐ கருவிகள்
மாணவர்களின் கற்றலை எளிதாக்குவதற்காக ஜெமினி ஏஐ செயலியில் பிரத்யேகமாக ஸ்டூடன்ட் ஹப் என்ற பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் தங்களது பாடக் குறிப்புகளைப் பதிவேற்றி, ஸ்டடி நோட்புக்ஸ் மூலம் பிரத்யேக படிப்புத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
மேலும், தங்களின் புரிதலைப் பரிசோதிக்க மாதிரி வினாடி வினாக்கள், பிளாஷ் கார்டுகள் மற்றும் பாடத்திட்டத்தில் உள்ள தேர்வுத் தேதிகளை கூகுள் கேலெண்டரில் தானாக சேர்க்கும் வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஜெமினி லைவ்
3D வரைபடங்கள் மற்றும் ஜெமினி லைவ் மூலமாக தீவிர ஆராய்ச்சி
பாடப் புத்தகங்களில் உள்ள கடினமான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள 3D சிமுலேஷன்கள், ஊடாடும் வரைபடங்கள் மற்றும் வரைபடக் காட்சிகளை ஜெமினி உருவாக்கும்.
உதாரணத்திற்கு, உயிரியல் பயிலும் மாணவர்கள் டிஎன்ஏ அமைப்பை 3D முறையில் முப்பரிமாணத்தில் சுழற்றிப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும்.
அத்துடன், ஜெமினி லைவ் அம்சத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் ஒரே நேரத்தில் பல கட்ட ஆராய்ச்சிகளைச் செய்யவும், அதன் முடிவுகளைக் குரல் வழியில் பேசிப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
விண்ணப்பிக்கும் முறை மற்றும் யூடியூப் பிரீமியம் தள்ளுபடி
இச்சலுகையை பெற விரும்பும் கல்லூரி மாணவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் தங்களது கல்லூரி மின்னஞ்சல் அல்லது SheerID சரிபார்ப்பு மூலம் தங்களின் மாணவர் சான்றை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், மாணவர்களுக்குக் கூகுள் ஏஐ புரோ மற்றும் விளம்பரமற்ற யூடியூப் பிரீமியம் கட்டணங்களில் 70 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் 2026 டிசம்பர் 31க்குள் கூகுளின் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.