RCS சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்
வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் போன்ற குறுஞ்செய்தி சேவைகளுக்கு மாற்றாக இலவசமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுளின் RCS (Rich Communication Services) குறுஞ்செய்தி சேவை அடிப்படையாகவே வழங்கப்பட்டு வருகிறது. எதிர் தரப்பினரும் RCS வசதியை கொண்டிருக்கும் பட்சத்தில், வாட்ஸ்அப்பில் உள்ளதனைப் போலவே, இணைய வசதியைப் பயன்படுத்தி குறுஞ்செய்திகள் மற்றும் பிற தகவல்களை RCS சேவையிலும் பகிர்ந்து கொள்ள முடியும். எதிர்த் தரப்பினரிடம் RCS வசதி இல்லாத பட்சத்தில், நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள் சாதாரண SMS அல்லது MMS ஆகவே அனுப்பப்படும். ஆப்பிள் iMessage வசதிக்கு இணையாக, கூகுளின் இந்த RCS வசதியை நாம் கூறலாம்.
பிரித்துக்காட்ட புதிய வசதி:
ஒருவருடன் நாம் சாட் செய்யும் போது, அது RCS வசதியைக் கொண்டு செயல்படுகிறதா அல்லது SMS ஆகவே செயல்படுகிறதா என்பதை நாம் கூர்ந்து கவனித்தால் தான் தெரியும். பெரும்பாலானோருக்கு இதனைக் கண்டறிவதில் சிக்கல் இருக்கலாம். எனவே, RCS சாட்களின் பின்பக்க வால்பேப்பரை மாற்றும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட நபருடனான சாட்டானது RCS வசதியா அல்லது சாதாரண SMS சேவையா என்பதை பார்த்த உடனே நம்மால் கண்டறிய முடியும். இந்த வசதியினை விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது கூகுள்.