'மேப்ஸ்' சேவை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தும் கூகுள்
செய்தி முன்னோட்டம்
ஸ்மார்ட்போன் மற்றும் தேடுபொறி சேவையைத் தொடர்ந்து தங்களுடைய மேப்ஸ் சேவையை மேம்படுத்தி வருகிறது கூகுள். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் மற்றும் கருவிகளை பிற சேவைகளைத் தொடர்ந்து மேப்ஸ் சேவையிலும் வழங்கத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
மேப்ஸ் சேவையை குறிப்பிட்ட இடம் எங்கிருக்கிறது என்பதற்காவும், அதனை எப்படி அடைவது என்பதற்கான வழிகாட்டியாக மட்டுமில்லாமல் புதிய இடங்களைக் குறித்து தெரிந்து கொள்வதற்காகவும் பயனாளர்கள் பயன்படுத்த வேண்டும் எனக் கருதுகிறது கூகுள்.
பயனாளர்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் ஒன்றினைத்து, அதனை பிர பயனர்களின் தேடல் முடிவுகளாக அளிக்கும் வகையிலான மேம்பாடுகளும் மேப்ஸ் வசதியில் செய்யப்பட்டிருக்கின்றன.
கூகுள்
EV சார்ஜிங் ஸ்டேஷன்கள் குறித்த அப்டேட்:
எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் குறித்த தகவல்களை கூகுள் மேப்பில் தேடும்போது, அந்த சார்ஜிங் ஸ்டேஷனை கடைசியாக பயனாளர்கள் எப்போது பயன்படுத்தியிருக்கிறார்கள், அந்த சார்ஜிங் ஸ்டேஷனில் எந்தெந்த வாகனங்களை சார்ஜ் செய்ய முடியும், சார்ஜிங் கட்டணம் எவ்வளவு என்பது குறித்த தகவல்களையும் கூடுதலாக அளிக்கத் திட்டமிட்டிருக்கிறது கூகுள்.
இதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட சார்ஜிங் ஸ்டேஷன் தங்களுக்கு சரியானதாக இருக்குமா, இல்லையா என பயனாளர்கள் சரியான முடிவெடுத்து நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பது கூகுளின் வாதம்.
25% சார்ஜிங் ஸ்டேஷன்கள் பெரும்பாலான நேரங்களில் இயங்குவதில்லை. இதனால் பயனாளர்கள் அந்த சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு சென்று நேரத்தை வீணாக்க நேரிடுகிறது. இதனாலேயே மேற்கூறிய வசதியை மேம்படுத்துகிறது கூகுள்.
மேப்ஸ்
'லென்ஸ் இன் மேப்' வசதி:
மேற்கூறிய வசதிகளைத் தவிர்த்து, 'இம்மர்ஸிவ் வ்யூ' மற்றும் 'லென்ஸ் இன் மேப்' உள்ளிட்ட வசதிகளையும் மேம்படுத்தியிருக்கிறது கூகுள்.
இம்மர்ஸிவ் வ்யூ வசதியுடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் சிறு கடைகள், வானிலை மாற்றம் மற்றும் டிராஃபிக் தகவல்களையும் சேர்த்து வழங்குகிறது கூகுள். இதுவும் பயனாளர்கள் சரியான முடிவெடுக்கப் பயன்படும் எனத் தெரிவிக்கிறது அந்நிறுவனம்.
லென்ஸ் இன் மேப் வசதியின் மூலம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து கூகுள் மேப்பின் தேடுபொறி பட்டையில் உள்ள லென்ஸ் தேர்வை கிளிக் செய்து, நேரடியாக நாம் இருக்கும் இடம் குறித்த தகவல்களை புகைப்படம் எடுத்து அதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆக்மென்டட் ரியாலிட்டி வசதியை இதற்காகப் பயன்படுத்தியிருக்கிறது கூகுள்.