LOADING...
டீப்ஃபேக் வீடியோக்களைக் கண்டறியும் புதிய வசதி கூகுளின் ஜெமினி ஏஐ செயலியில் அறிமுகம்

டீப்ஃபேக் வீடியோக்களைக் கண்டறியும் புதிய வசதி கூகுளின் ஜெமினி ஏஐ செயலியில் அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 19, 2025
02:04 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அதைக் கண்டறிவதற்கான ஒரு புதியக் கருவியை கூகுள் தனது ஜெமினி செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. 'சிந்த்-ஐடி' (SynthID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படும் இந்தக் கருவி, ஒரு வீடியோ கூகுளின் ஏஐ கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதா அல்லது மாற்றப்பட்டதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. கடந்த மாதம் ஏஐ புகைப்படங்களைக் கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்திய கூகுள், தற்போது வீடியோக்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்தியுள்ளது.

செயல்பாடு

இந்தக் கருவி எவ்வாறு செயல்படுகிறது?

பயனர்கள் ஒரு வீடியோவை ஜெமினியில் பதிவேற்றி, "இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா?" (Was it created or edited using AI?) என்று கேட்டால் போதும். ஜெமினி அந்த வீடியோவின் காட்சிகள் (Visuals) மற்றும் ஒலி (Audio) ஆகிய இரண்டையும் தனித்தனியாகப் பகுப்பாய்வு செய்து, அதில் மறைந்துள்ள சிந்த்-ஐடி டிஜிட்டல் வாட்டர்மார்க்குகளைத் தேடும். உதாரணமாக, ஒரு வீடியோவின் ஆடியோ மட்டும் மாற்றப்பட்டிருந்தால், எந்த நேரத்தில் அந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஜெமினி துல்லியமாகக் கூறிவிடும். இந்தச் சிந்த்-ஐடி வாட்டர்மார்க்குகள் மனிதக் கண்களுக்குத் தெரியாது, ஆனால் மென்பொருளால் எளிதில் கண்டறிய முடியும்.

விதிமுறைகள்

பயன்பாட்டு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்

இந்தக் கருவியைப் பயன்படுத்துவதில் சிலக் கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது, அதிகபட்சமாக 100 எம்பி (100MB) அளவுள்ள மற்றும் 90 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோக்களை மட்டுமே இதில் சரிபார்க்க முடியும். மேலும், இது கூகுளின் ஏஐ மாடல்கள் (Google AI tools) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை மட்டுமே கண்டறியும். மற்ற நிறுவனங்களின் ஏஐ தொழில்நுட்ப கருவிகளால் உருவாக்கப்பட்டவற்றை இது கண்டறியாது. ஜெமினி செயலி மற்றும் இணையதளத்தில் உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் இந்த வசதி தற்போது பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது.

Advertisement