கூகுளின் அசுர வளர்ச்சி: 4 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியது ஆல்பாபெட்; செயற்கை நுண்ணறிவால் அதிகரித்த வருவாய்
செய்தி முன்னோட்டம்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், தனது நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால், நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் லாபத்தைச் ஈட்டியுள்ளது. இதன் விளைவாக, ஆல்பாபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ₹334 லட்சம் கோடி) கடந்து உலக சாதனை படைத்துள்ளது.
முக்கிய அம்சங்கள்
நிதி நிலை முடிவுகள்: முக்கியப் புள்ளிகள்
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கூகுளின் வளர்ச்சி முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது: வருவாய்: கடந்த ஆண்டை விட 18% அதிகரித்து 113.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. லாபம்: நிறுவனத்தின் நிகர லாபம் 30% உயர்ந்து 34.5 பில்லியன் டாலராக எட்டியுள்ளது. பங்கு மதிப்பு: ஒரு பங்கின் வருவாய் 2.82 டாலராகப் பதிவாகியுள்ளது.
துறைகள்
விளம்பரம் மற்றும் கிளவுட் துறையில் அதிரடி
கூகுளின் வருவாய்க்கு முதுகெலும்பாக விளங்கும் டிஜிட்டல் விளம்பரத் துறை மற்றும் கிளவுட் சேவைகள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுள்ளன: கூகுள் விளம்பரம் (Ads): தேடுபொறி (Search) மற்றும் யூடியூப் விளம்பரங்கள் மூலம் 82.3 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 14% அதிகமாகும். கூகுள் கிளவுட் (Cloud): ஏஐ சேவைகளுக்கான தரவு மையங்களின் தேவை அதிகரித்ததால், கிளவுட் பிரிவின் வருவாய் 48% உயர்ந்து 17.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
ஏஐ
ஏஐ புரட்சியும் ஜெமினியும்
ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, "கூகுள் தேடு பொறி முன்பை விட இப்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஏஐ தொழில்நுட்பமே முக்கிய காரணம்." என்று தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: ஆப்பிள் தனது ஐபோன்களில் உள்ள சிரி (Siri) உதவியாளரை மேம்படுத்தக் கூகுளின் ஜெமினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. முதலீடு: ஏஐ உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கடந்த ஆண்டில் மட்டும் கூகுள் 91 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த முதலீடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.