கூகுள் ஏஐ ஓவர்வியூ சொதப்பல்: கடினமான அறிவியல் கணக்குகளைப் போடும் ஏஐக்கு எளிய ஸ்பெல்லிங் சொல்லத் தெரியவில்லையா?
செய்தி முன்னோட்டம்
கூகுள் நிறுவனம் தனது தேடுபொறியில் (Search Engine) அறிமுகப்படுத்தியுள்ள ஏஐ ஓவர்வியூ அம்சம், எளிய ஆங்கில வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கைத் தவறாகக் கூறி சமூக வலைதளங்களில் கடும் கேலிக்குள்ளாகி வருகிறது. பயனர்கள் கேட்கும் எளிய கேள்விகளுக்கு இந்த ஏஐ தட்டச்சு செய்யும் பதில்கள், பள்ளிச் சிறுவர்கள் கூடச் செய்யாத மட்டற்ற பிழைகளுடன் இருப்பதாகப் பலரும் ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர். உதாரணமாக, 'Google' என்ற வார்த்தையில் எத்தனை 'P' எழுத்துக்கள் உள்ளன என்று கேட்டதற்கு இரண்டு என்றும், 'Journalism' என்ற வார்த்தையை "j-o-u-r-n-a-d-i-s-m" என்றும் அது தவறாகக் குறிப்பிட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பக் குறைபாடு
ஏஐ தொழில்நுட்பங்கள் வார்த்தைகளை எழுத்துக்களாகப் படிக்காமல் 'டோக்கன்களாக' மாற்றுவதே பிழைகளுக்குக் காரணம்
பெரிய மென்பொருள் குறியீடுகள் மற்றும் கடினமான அறிவியல் கணக்குகளைத் துல்லியமாகப் போடும் ஏஐக்கு, எளிய வார்த்தைகளின் எழுத்துக்களைக் கணக்கிடத் தெரியாததன் பின்னணியில் ஒரு தொழில்நுட்பக் குறைபாடு உள்ளது. மனிதர்களைப் போல ஏஐ அமைப்புகள் வார்த்தைகளை எழுத்து வாரியாகப் படிப்பதில்லை என்றும், அவை 'டோக்கன்கள்' (Tokens) எனப்படும் சிறு துண்டுகளாகவே மொழியைப் பகுப்பாய்வு செய்கின்றன என்றும் கூகுள் விளக்கியுள்ளது. இந்த டோக்கன்களை எண்களின் வரிசையாக மட்டுமே ஏஐ புரிந்துகொள்வதால், 'Strawberry' போன்ற வார்த்தைகளில் எத்தனை 'R' உள்ளன என்பது போன்ற எளிய ஸ்பெல்லிங் கணக்குகளில் எல்எல்எம் (LLM) மாதிரிகள் தொடர்ந்து சொதப்பி வருகின்றன.
தேடுபொறி ஆதிக்கம் மற்றும் சர்ச்சை
'Disregard' போன்ற எளிய வார்த்தைகளுக்கு அகராதி விளக்கத்தைத் தராமல் சாட்பாட் போலப் பதிலளித்த கூகுள்
ஸ்பெல்லிங் பிழைகள் ஒருபுறமிருக்க, 'Disregard', 'Forget', 'Ignore' போன்ற வார்த்தைகளைத் தேடிய பயனர்களுக்குக் கூகுள் ஏஐ முற்றிலும் தேவையற்ற பதில்களை வழங்கி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார்த்தைகளுக்கான அகராதி பொருள் விளக்கத்தைத் தருவதற்குப் பதிலாக, "புரிந்துகொண்டேன், உங்களது அடுத்த கேள்வியைக் கேளுங்கள்!" என்பது போன்ற சாட்பாட் உரையாடல் பதில்களை அது காட்டியுள்ளது. கூகுள் இந்தத் தவறை தற்பொழுது சரிசெய்துள்ள போதிலும், இணையத்தில் நேரடியாகக் கிடைக்க வேண்டிய பயனுள்ள லிங்க்குகளை ஏஐ ஓவர்வியூ மறைத்துத் தேடல்களை வீணாக சிக்கலாக்குவதாகப் பயனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.