AI-க்களால் உருவாகும் ஆபத்து.. எச்சரிக்கிறார் AI தொழில்நுட்பத்தின் தந்தை!
ஜொஃப்ரி ஹின்டன், செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர், கூகுளில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து எச்சரித்திருக்கிறார் அவர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர் AI என்ன விதமான ஆபத்தை விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பது குறித்து பேசியிருக்கிறார். குறிப்பாக வளர்ந்து வரும் சாட்ஜிபிடி, மிட்ஜர்னி போன்ற 'ஜெனரேட்டிவ் AI'-க்களால் அதிகரிக்கும் தவறான மற்றும் போலியான தகவல்கள் குறித்து கவலை தெரிவித்திருக்கிறார் ஜொஃப்ரி. இதில் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால் சாதாரண மக்களால் உண்மையான தகவல் எது, பொய்யான தகவல் எது என கண்டறிய முடியாமல் போகும் அபாயம் இருப்பது தான்.
AI-க்களால் ஆபத்தா?
இதற்கு உதாரணமாக அவர் குறிப்பிடுவது, சமீபத்தில் எலான் மஸ்க், ஜோ பைடன், உலகப் பிரபலங்களின் புகைப்படங்களை சேர்த்து பொய்யான ஒரு பின்புலத்தில் அவர்கள் இருப்பது போலான புகைப்படங்களை AI சேவைகள் உருவாக்கி அவை இணையத்தில் வைரலாகப் பரவின. அவை உண்மையா பொய்யா என கண்டறிய முடியாத வகையில் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தன. இதுபோல போலியான மற்றும் தவறான தகவல்கள் அதிகளவில் இணையத்தில் பரவக்கூடும் என எச்சரிக்கிறார் அவர். அடிப்படை வேலைகளான பெர்சனல் அசிஸ்டன்ட், பாராலீகல் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் உள்ளிட்ட வேலைகள் இனி வரும் காலங்களில் AI-களால் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். AI ஆராய்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்த வைக்க வேண்டும் என AI வல்லுநர்கள் கையெழுத்திட்ட கடிதங்களில் தான் பங்கெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் ஜொஃப்ரி.