ஜெர்மனியில் பரபரப்பு: 16 வயது சிறுமியை தப்பான முறையில் தொட்ட ரோபோவை பறிமுதல் செய்த காவல்துறை
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனியின் கொலோன் நகரில், மனித வடிவிலான ரோபோ ஒன்று 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வினோதச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலோன் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் வெளியே தனது தோழிகளுடன் நின்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியை நோக்கி, மனித வடிவிலான ரோபோ வந்துள்ளது. அந்த ரோபோ சிறுமியின் மீது முறையற்ற தொடுகைகளில் ஈடுபட்டதுடன், பாலியல் ரீதியான அசைவுகளை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ரோபோவின் உரிமையாளரான 16 வயது சிறுவனும், அவனது நண்பனும் சேர்ந்து செல்போனில் படம்பிடித்து, சமூக வலைதளங்களில் நேரலை செய்துள்ளனர். மேலும் இதற்குக் கேலி வர்ணனையும் செய்துள்ளனர்.
விசாரணை
காரின் டிக்கியில் மறைக்கப்பட்ட ரோபோ
சம்பவம் குறித்து தகவலறிந்த கொலோன் காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று அருகில் சந்தேகத்திற்கிடமான நபர்களை மடக்கிப் பிடித்தனர்.
போலீசார் வருவதற்குள் அந்த டீனேஜ் உரிமையாளர் ரோபோவை ஒரு காரின் பின் பகுதியில் உள்ள டிக்கியில் மறைத்து வைத்திருந்தது சோதனையில் தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த ரோபோவையும், இருவரது கைப்பேசிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த ரோபோ தானாக செயல்பட்டதா அல்லது யாராவது தொலைவிலிருந்து இயக்கி வேண்டுமென்றே இந்தச் செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
நவீன தொழில்நுட்பக் காலத்தில் ரோபோக்களைத் தவறாகப் பயன்படுத்தும் நிகழ்வுகள் குறித்து இந்தச் சம்பவம் கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளது.