விண்டோஸிற்கு விடை கொடுக்கும் பிரான்ஸ்! அரசு அலுவலகங்களில் 'லினக்ஸ்' மென்பொருள் அமல்; டிஜிட்டல் சுதந்திரத்தை நோக்கி பயணம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது நாட்டின் டிஜிட்டல் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் பிரான்ஸ் அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அரசு அலுவலகங்களில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மென்பொருளுக்குப் பதிலாக, ஓப்பன் சோர்ஸ் முறையில் இயங்கும் லினக்ஸ் மென்பொருளைப் பயன்படுத்தப் போவதாகப் பிரான்ஸ் அறிவித்துள்ளது. "எங்கள் டிஜிட்டல் விதியை நாங்களே தீர்மானிக்கவும், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அதீத சார்பைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை அவசியம்" என பிரான்ஸ் அமைச்சர் டேவிட் அமீல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொழில்நுட்பம்
அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் மீதான பிடி குறையுமா?
அமெரிக்காவில் தற்போதுள்ள அரசியல் சூழல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்தத் தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. பிரான்ஸ் அரசின் தரவுகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மீது அந்நாட்டிற்கே முழுமையான கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும். கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின் தொடர்ச்சியாகவே பிரான்ஸின் இந்த அதிரடி முடிவு பார்க்கப்படுகிறது.
நடைமுறை
எப்படி செயல்படுத்தப்படும்?
இந்த மெகா மாற்றம் முதற்கட்டமாகப் பிரான்ஸின் டிஜிட்டல் விவகாரங்களுக்கான இடைநிலை இயக்குநரகத்தில் உள்ள கணினிகளில் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் செயலிக்கு மாற்றாக, பிரான்ஸில் உருவாக்கப்பட்ட விசியோ (Visio - Jitsi அடிப்படையிலானது) என்ற மென்பொருளைப் பயன்படுத்தப் பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்களும் தங்களது லினக்ஸ் மாற்றத்திற்கான விரிவான திட்டத்தை 2026 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. லினக்ஸ் மென்பொருளில் எந்த குறிப்பிட்ட பதிப்பைப் பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஐரோப்பா
ஐரோப்பா முழுவதும் எதிரொலிக்கும் மாற்றம்
பிரான்ஸ் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்க மற்றும் சீனத் தொழில்நுட்பங்களுக்கு மாற்றாகத் தங்களது சொந்தத் தொழில்நுட்பத் தளங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் இலவசமாகக் கிடைப்பதுடன், அவற்றை விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க முடியும் என்பதால், இது ஒரு பாதுகாப்பான மற்றும் சிக்கனமான தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸின் இந்த முடிவு மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்குச் சர்வதேச சந்தையில் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.