இஸ்ரோவின் ஒவ்வொரு ரூபாய் முதலீட்டிற்கும் 2.5 மடங்கு வருமானம்; அறிக்கையில் தகவல்
சிக்கனமான கண்டுபிடிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதலீட்டிற்கு மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இஸ்ரோவுக்கு செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 2.54 ரூபாய் வருமானம் கிடைப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆலோசனை நிறுவனமான நோவாஸ்பேஸ் தயாரித்த 'இந்திய விண்வெளித் திட்டத்தின் சமூக-பொருளாதார தாக்க பகுப்பாய்வு' என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ் சோமநாத் அளித்த ஒரு பேட்டியில், "ஏழை அல்லது பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி இஸ்ரோ உண்மையில் ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் தொட்டுள்ளது. விண்வெளி திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடு சமூகத்திற்கு பெரிதும் பயனளித்துள்ளது." என்று 2.5 மடங்கு வருவாயைக் குறிப்பிட்டு தெரிவித்தார்.
நாசாவின் ஒரு ஆண்டு பட்ஜெட்டை விடக் குறைவு
நோவாஸ்பேஸின் முன்னணி நிபுணர் ஸ்டீவ் போச்சிங்கர் கூறுகையில், "விண்வெளியில் இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது." என்றார். மேலும், இஸ்ரோ தொடங்கப்பட்டதில் இருந்து 55 ஆண்டுகளில் இதுவரை இஸ்ரோவில் செய்யப்பட்ட மொத்த முதலீடு, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு வருட பட்ஜெட்டை விடக் குறைவு என்றும் அவர் கூறினார். இஸ்ரோவின் தற்போதைய ஆண்டு பட்ஜெட் சுமார் $1.6 பில்லியன் மற்றும் நாசாவின் தற்போதைய ஆண்டு பட்ஜெட் $25 பில்லியன் ஆகும். இது விண்வெளிக்கான இந்தியாவின் செலவை விட 15.5 மடங்கு அதிகம். இஸ்ரோவின் கடைசி மதிப்பீட்டின்படி, இந்திய விண்வெளி சகாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட மொத்தம் 127 இந்திய செயற்கைக்கோள்கள் டிசம்பர் 31, 2023 வரை ஏவப்பட்டுள்ளது.