Page Loader
பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company
பறக்கும் டாக்ஸி வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது இபிளேன் கம்பெனி

பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company

எழுதியவர் Prasanna Venkatesh
May 24, 2023
03:18 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையைச் சேர்ந்த பறக்கும் மின் டாக்ஸி ஸ்டார்ட்அப் நிறுவனமான ePlane Company நிறுவனத்தின் வடிவமைப்புக்கு DGCA (Directorate General of Civil Aviation) ஒப்புதல் அளித்திருக்கிறது. ஹெலிகாப்டரைப் போல செங்குத்தாக பறக்கத் தொடங்கும் மற்றும் தரையிறங்கும் வகையிலான eVTOL (Electric Vertical Takeoff and Landing) விமானத்தை உருவாக்கி வருகிறது இபிளேன் கம்பெனி. தற்போது அதன் வடிவமைப்புக்கான ஒப்புதலையே (DOA - Design Organisation Approval) அந்நிறுவனம் பெற்றிருக்கிறது. DOA ஒப்புதல் என்பது ஒரு விமானத்தின் வடிவமைப்பு அனைத்து வகைகளிலும் விதிமுறைகளுடன் ஒத்துப் போகிறது என்பதை DGCA அங்கீகரிக்கும் ஒரு செயலாகும். மேலும், வணிகரீதியில் ஒரு விமானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முதல் படி இந்த DOA ஒப்புதல்.

பறக்கும் மின் டாக்ஸி

இபிளேன் கம்பெனியின் திட்டம் என்ன? 

DGCA-விடமிருந்து DOA ஒப்புதலைப் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார் இபிளேன் கம்பெனியின் நிறுவனரும் சிஇஓவுமான பேராசிரியர் சத்யநாராயணன் சக்கரவர்த்தி. இந்த நிறுவனமானது வணிக ரீதியில் பயன்படுத்தும் வகையிலான e200 eVTOL என்ற விமானத்தை வடிவமைத்து வருகிறது. நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில், தங்களுடைய புதிய விமானத்தில் மூலம் பறக்கும் டாக்ஸி சேவையை வழங்க முயற்சி செய்து வருகிறது அந்நிறுவனம். பறக்கும் டாக்ஸியானது எலெக்ட்ரிக் டாக்ஸியாக இருக்கும் பட்சத்தில் விரைவாக செல்ல வேண்டிய இடங்களுக்கும் செல்லலாம், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லை என்பது தான் இதன் அடிப்படை நோக்கம். 2025-ம் ஆண்டு முதல் பயணியை தங்கள் பறக்கும் மின் டாக்ஸியில் அழைத்துச் செல்வோம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் சத்யநாராயணன் சக்கரவர்த்தி.